×
Saravana Stores

கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,400 கன அடி நீர் திறப்பு: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை: ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 1400 கன அடியாக திறக்கப்பட்டுள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திரா-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும்.

தெலுங்கு கங்கா ஒப்பந்தப்படி 8 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடலாம். மேலும், இந்த வருடம் ஜூலை மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஆந்திர அரசு வழங்காத நிலையில், தமிழக அரசின் நீர்வளத்துறை அதிகாரிகள் கிருஷ்ணா தண்ணீர் திறக்க வேண்டும் என ஆந்திர அரசின் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து, கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு கடந்த மாதம் 19ம் தேதி காலை 11 மணியளவில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பின்னர், படிப்படியாக உயர்த்தி 1200 கன அடியாகவும், மறுநாள் 1300 கன அடியாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இந்த நீர் 152 கி.மீ. கடந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை, தாமரைக்குப்பம், ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. தொடக்கத்தில் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் வினாடிக்கு 195 கன அடியாகவும் பின்னர் படிப்படியாக உயர்த்தி 300 கன அடிவரை தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

மேலும், ஆந்திராவில் பெய்த மழையால் 1300 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் 16ம் தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து வெறும் 300 கன அடியாக குறைத்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. ஆனால், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் மழைநீருடன் சேர்ந்து 501 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மீண்டும் கண்டலேறு அணையில் 150 கன அடியாக நீர் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் மழைநீருடன் சேர்த்து வினாடிக்கு 170 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது கண்டலேறு அணையில் கிருஷ்ணாநீர் வினாடிக்கு 1400 கன அடியாக திறக்கப்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் 465 கன அடியாக நீர் அதிகரித்து வருகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 1,400 கன அடி நீர் திறப்பு: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kandaleru Dam ,Tamil Nadu ,Bundi Lake ,Chennai ,Krishna ,Andhra Pradesh ,Andhra government ,
× RELATED கண்டலேறு அணையில் தண்ணீர் திறப்பு;...