புதுடெல்லி: ‘முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை ஆன்லைனில் நடத்த வேண்டும், தேர்வு கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்வு மையங்களை அவுட்சோர்சிங் செய்வது குறைக்கப்பட வேண்டும், எத்தனை முறை நீட் தேர்வை எழுதலாம் என்பதில் கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்’ என ஒன்றிய அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை செய்துள்ளது. மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்தது. இதில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
வினாத்தாள் கசிந்ததாகவும், வினாத்தாள் திருத்துவதில் பல முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுமட்டுமின்றி யுஜிசி-நெட் தேர்வு வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதே போல, நீட் பிஜி நுழைவுத்தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால், இத்தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மீதான நம்பகத்தன்மை குறித்து பல தரப்பினரும் கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்றத்திலும் பல வழக்குகள் தொடரப்பட்டன. சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இதற்கிடையே, என்டிஏ செயல்பாட்டை ஆய்வு செய்யவும், நியாயமான முறையில் தேர்வுகள் நடத்துவதற்கான பரிந்துரைகளை வழங்கவும் உயர்மட்ட குழு அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்தது.
இந்த குழு தனது இறுதி அறிக்கையை சமர்பிக்க 2 வார காலம் அவகாசம் அளிக்க வேண்டுமென கடந்த 21ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அவகாசம் கோரியது. இந்நிலையில், இறுதி அறிக்கை கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டதாகவும், அதில் முக்கிய நுழைவுத்தேர்வுகளை நடத்துவதில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. உயர்மட்ட குழுவின் இறுதி அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படும் பரிந்துரைகள்:
* ஆப்லைனில் நுழைவுத்தேர்வுகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும். நீட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத்தேர்வுகள் முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட வேண்டும்.
* ஆன்லைனில் தேர்வு நடத்த முற்றிலும் சாத்தியமில்லாத பகுதிகளில், ஹைபிரிட் முறையில் தேர்வை நடத்தலாம். அதாவது, வினாத்தாள்களை டிஜிட்டல் முறையில் அனுப்பி, விடைகளை ஓஎம்ஆர் ஷீட்டில் குறிக்க வைக்கலாம்.
* தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோர் தனியார் நபர்களாக இருப்பதை குறைக்க வேண்டும். இதே போல, தனியார் இடத்தை அவுட்சோர்சிங் செய்து தேர்வு மையங்களாக்குவதையும் தவிர்க்க வேண்டும். என்டிஏ தனது சொந்த தேர்வு மையங்களை அதிகரிக்க வேண்டும்.
* நீட் உள்ளிட்ட முக்கிய நுழைவுத்தேர்வுகளை அதிகபட்சமாக எத்தனை முறை எழுதலாம் என்கிற கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.
* அதிகம் பேர் நீட் தேர்வை எழுதுவதால், ஜேஇஇ போல தகுதித்தேர்வு, மெயின் தேர்வு என ஒன்றுக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடத்தலாம்.
இவ்வாறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த இறுதி அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
* நுழைவுத்தேர்வு முறைகேடு தொடர்பான அபாயங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாக உயர்மட்ட குழு 22 கூட்டங்களை நடத்தி உள்ளது.
* இதில், மாணவர்கள், பெற்றோர் உட்பட பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களில் இருந்து சுமார் 37,000 பரிந்துரைகளை கவனத்தில் கொண்டது.
The post முறைகேடுகள் நடப்பதை தடுக்க நீட் தேர்வை ஆன்லைனில் நடத்தலாம்: ஒன்றிய அரசுக்கு உயர்மட்ட குழு பரிந்துரை appeared first on Dinakaran.