திருவனந்தபுரம்: ஒன்றிய அரசு சிறுபான்மை சமூகங்கள் மீது திட்டமிட்டு வெறுப்பை பரப்புகிறது என்று வயநாட்டில் நேற்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசினார். வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். கடந்த 23ம் தேதி இவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதன்பின் டெல்லி சென்ற பிரியங்கா காந்தி, நேற்று மீண்டும் வயநாட்டுக்கு வந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று மீனங்காடி, பனமரம், பொழுதனா உள்பட பல்வேறு பகுதிகளில் அவர் பிரசாரம் செய்தார். மீனங்காடி பகுதியில் நடந்த கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசியதாவது: வயநாடு தொகுதியின் பிரதிநிதியாக ஆவதின் மூலம் நான் நாட்டின் மிகவும் பெருமைமிக்க நபராக மாறுவேன். நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தால் அது எனக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவமாகும். வயநாட்டிலுள்ள மக்கள் மிகவும் தைரியசாலிகள் என்று எனக்குத் தெரியும்.
நீங்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர்கள். உங்களுடைய அன்புக்கு நான் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாட்டில் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு இடையே அச்சமும் கோபமும் பரவி வருகிறது. சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மணிப்பூரில் என்ன நடந்தது என்பது குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். ஒன்றிய அரசு சிறுபான்மை சமூகங்கள் மீது திட்டமிட்டு வெறுப்பை பரப்புகிறது.
அரசியலமைப்பு சட்டத்தை தொடர்ந்து மீறி வருகின்றனர். மக்களின் நலன்களை விட பிரதமரின் நண்பர்களுக்காகத்தான் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. விவசாய விளை பொருட்களுக்கு உரிய ஆதார விலை தருவதாக பொய்யான வாக்குறுதி அளிக்கின்றனர். நம் நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
என்னை எம்பியாக தேர்வு செய்தால் என் திறமை முழுவதையும் உங்களுக்காக பயன்படுத்துவேன். உங்களுடைய தோளோடு தோள் சேர்ந்து அனைத்து பிரச்னைகளுக்காகவும் நான் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். நான் வெற்றி பெற்றால் வயநாட்டுக்கு வர மாட்டேன் என்று சிலர் கூறுகின்றனர். வெற்றி பெற்ற பிறகு அவர்களுக்கு புரியும். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை எந்தக் காரணம் கொண்டும் பாழாகாது. இவ்வாறு அவர் பேசினார்.
The post சிறுபான்மை சமூகங்கள் மீது வெறுப்பை பரப்பும் ஒன்றிய அரசு: வயநாட்டில் பிரியங்கா காந்தி பிரசாரம் appeared first on Dinakaran.