×
Saravana Stores

ஏற்கனவே மிரட்டல் வரும் நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்: காலிஸ்தான் தலைவன் அச்சுறுத்தல்

புதுடெல்லி: இந்திய விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் நேற்று, இன்டிகோ, விஸ்தாரா, ஆகாசா ஏர், ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்களைச் சேர்ந்த 24 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. எனினும் சோதனையில் அவை அனைத்துமே வெறும் புரளி என்பது கண்டறியப்பட்டது.

இந்த வாரம் மட்டும் 90க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு, மிரட்டல் விடுக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விமான போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அச்சுறுத்தல் புரளிகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஒன்றிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வெளிநாட்டில் தங்கியிருக்கும் சீக்கியர்களுக்கான நீதித் தலைவரும், காலிஸ்தான் தீவிரவாதியுமான குர்பத்வந்த் சிங் பன்னு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சர்வதேச நாடுகளுக்கு ஏர் இந்தியா விமானத்தில் செல்வோருக்கு இந்த மிரட்டல் எச்சரிக்கை வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டும் இதே போன்று மிரட்டலை குர்பத்வந்த் சிங் பன்னு விடுத்தார்.

கடந்த 1985ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி ஏர் இந்தியா போயிங் விமானம் வெடித்த சம்பவத்தின் பின்னணியில் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவின் இன்றைய அறிக்கை மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post ஏற்கனவே மிரட்டல் வரும் நிலையில் ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம்: காலிஸ்தான் தலைவன் அச்சுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Air India ,Khalistan ,New Delhi ,IndiGo ,Vistara ,Agasa Air ,Dinakaran ,
× RELATED ஜெய்ப்பூரில் இருந்து துபாய் செல்லும்...