×
Saravana Stores

ஓய்வூதியதாரர்களை குறிவைக்கும் இணைய வழி மோசடிகள் ஓடிபி எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம்

மன்னார்குடி, அக். 21: திருவாரூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் ஏடிஎஸ்பி அருள்செல்வன் தலைமையில் இணையவழி குற்றங்களு க்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருவதாக சைபர் கிரைம் ஏடிஎஸ்பி தெரிவித்துள்ளார்.

இணையவழி மோசடி நபர்கள் ஓய்வூதியர்களை எவ்வாறு ஏமாற்றுகின்றனர். அவர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி, ஏமாற்றப்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சைபர் கிரைம் ஏடிஎஸ்பி அருள்செல்வன், இன்ஸ்பெக்டர் மணிமேகலை ஆகியோர் கூறுகையில், ஓய்வூதியர்கள் ஆன்லைன் மூலமாக வாழ்நாள் சான்றிதழ் பெறும்போது சில இடங்களில் இணைய வழி மோசடியில் ஈடுபடும் நபர்கள் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை முறைகேடாக பெற்று சேமித்து வைத்துக்கொள்கின்றனர்.

சைபர் குற்றவாளிகளின் தந்திரங்கள்: இணைய வழி மோசடியில் ஈடுபடும் நபர்கள் ஓய்வூதியம் பெறுபவரின் பணி நியமனம் செய்யப்பட்ட தேதி, ஓய்வு பெற்ற தேதி, பிபிஓ எண், ஆதார் அட்டை எண், நிரந்தர முகவரி, மின்னஞ்சல் முகவரி, ஓய்வு பெற்ற நேரத்தில் அவர்கள் பெற்ற தீர்வு தொகைகள் மற்றும் மாத ஓய்வூதியம் குறித்த தகவல்களை முதலில் சேமித்து வைத்து கொள்வார்கள்.

பின்னர், மோசடி செய்யும் நபர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மேற்கண்ட தகவல்களை சொல்வதன் மூலம் ஓய்வூதியர்கள் நம்பிக்கையை பெறுவார்கள். சைபர் மோசடியில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் சான்றிதழை ஆன்லைன் மூலம் புதுப்பித்தலுக்காக ஓடிபியை பெறவும், பகிர்ந்து கொள்ளவும் ஊக்கம் அளிப்பார்கள். ஓய்வூதியர்களின் வங்கி கணக்கில் உள்ள தொகையை போலி வங்கி கணக்கு அல்லது வாலட்டுக்கு இந்த ஓடிபியை பயன்படுத்தி மாற்றி விடுவார்கள்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மோசடி அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஓய்வூதிய விநியோக அதிகாரிகள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஒருபோதும் ஓய்வூதியர்களுக்கு அழைப்பு விடுப்பதில்லை. வாழ்நாள் சான்றிதழை ஆன்லைனில் புதுப்பிக்க ஓடிபி பகிருமாறு கோறுவதில்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஓடிபி எண், ஏடிஎம் கார்டு எண், ஆதார் கார்டு எண், பான் கார்டு எண், போன்றவற்றை எந்த சூழலிலும் யாரிடமும் பகிர்ந்து கொள்ள கூடாது. முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் அறிமுக இல்லாத நபர்களின் நட்பு கோரிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது. முகநூலில் உங்கள் நண்பர் அல்லது உறவினர் பெயரில் பணம் கேட்டால் கொடுத்து ஏமாற வேண்டாம். மேலும், உங்களது தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தளங்களில் கண்டிப்பாக பகிரக்கூடாது.

வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆகியவற்றில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் இருந்து வரும் வீடியோ கால் அழைப்புகளை தவிர்க்க வேண்டும். புதிய எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற மற்றும் சந்தேகத்துக்குரிய லிங்கில் நுழையக் கூடாது.

கூகுள் தேடல் மூலம் கிடைக்கப்பட்ட கஸ்டமர் கேர் மற்றும் ஹெல்ப்லைன் எண்களை அவர்களின் அலுவலக வெப்சைடில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். செல்போன் டவர் அமைப்பதாக வரும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாறக்கூடாது. டவர் அமைக்க நீங்கள் பணம் செலுத்த தேவையில்லை. முன்பின் தெரியாத நபர்கள் அனுப்பும் கியூ ஆர் கோர்டை ஸ்கேன் செய்ய வேண்டாம். மீறி ஸ்கேன் செய்தால் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் கண்டிப்பாக திருடப்படும்.
இணையதளத்தில் ஏமாற்றப்பட்டால் செய்ய வேண்டியவை: இணைய தளங்கள் மூலமாக நடைபெறும் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்கள் எல்லைக் குட்பட்ட காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.

மேலும், தாங்கள் பாதிக்கப்பட்ட சான்றுகளின் நகல்களை உதாரணமாக பேங்க் ஸ்டேட்மென்ட், சாட் ஸ்க்ரீன் ஷாட், போன் நம்பர் போன்றவற்றை பென் டிரைவ் அல்லது பிரிண்ட் அவுட் ஆக புகார் உடன் சேர்த்து கொடுக்க வேண்டும்.
மேலும், சைபர் குற்றங்களுக்கான உதவி எண்:1930, திருவாரூர் சைபர் கிரைம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் 94981 64124 செல் நம்பரில் தொடர்பு கொள்ளலாம் என்றனர்.

The post ஓய்வூதியதாரர்களை குறிவைக்கும் இணைய வழி மோசடிகள் ஓடிபி எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Tiruvarur ,ADSP ,Arulselvan ,
× RELATED கொடைக்கானலில் டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி