×

சென்னையில் கனமழையால் தேங்கிய 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றம்

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் தேங்கிய 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீராகி இயல்பு நிலை திரும்பியுள்ளது. சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 15ம் தேதி வடசென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் நேரடியாக சென்று மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையொட்டி கனமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் தலைமையில் கடந்த மாதம் 30ம் தேதி மற்றும் கடந்த 14ம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, கனமழையின் தாக்கத்தினை எதிர்கொள்ள பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பல்வேறு துறைகள் மூலம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அந்தவகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு இரவு பகல் பாராமல் நேரிடையாக சென்று மழைநீர்அகற்றும் பணிகளை பார்வையிட்டு துரிதப்படுத்தினார். அதேபோல், அமைச்சர்களும் முதல்வரின் உத்தரவின்படி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, நிவாரண பணிகளை துரிதப்படுத்தினர். அதன்படி, கடந்த 15ம் தேதி சென்னையில் 131 மி.மீ. அளவிற்கு அதிகமாக மழை பொழிந்ததால், 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கியது. சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும், வருவாய்த் துறையும், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியமும் இணைந்து போர்க்கால அடிப்படையில் மழைநீர் அகற்றும் பணியினை மேற்கொண்டன.

அதன் பயனாக 20 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் உடனடியாக அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டு, பொதுமக்கள் இயல்பாக இப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதைகளை பயன்படுத்தும் நிலை ஒரே நாளில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. முதல்வரின் துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், ஆலோசனைகளும் தான் இதன் முழு முதல் காரணமாகும். அதேபோல், கணேசபுர சுரங்கப்பாதையில் தற்போது தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீர்செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் 20 செ.மீ. மழைபொழிந்தால் ஒரு வாரத்திற்கு மேல் தேங்கிய மழைநீர் அகற்றும் சூழ்நிலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

The post சென்னையில் கனமழையால் தேங்கிய 21 சுரங்கப்பாதைகளில் மழைநீர் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tiruvallur ,Chengalpattu ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கனமழை