×
Saravana Stores

திருத்தணியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன

திருத்தணி, அக்.10: திருத்தணியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலைத்துறை சார்பாக முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதன்படி, மணல் மூட்டைகள், நீர் இறைப்பான் இயந்திரங்கள் ஆகியற்றை தயார் நிலையில் வைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இதுகுறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அண்மையில் நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தில் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் அனைத்துத்துறை அலுவலர்களும் கடந்த காலங்களில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட அனுபவங்களை பாடமாக எடுத்துக்கொண்டு பேரிடர் பணிகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்திற்குள் தொடங்க இருப்பதால் உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துத்துறை அலுவலர்களும் வடிகால் பணி, மின் வயர், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வடிகால் பணி, தூர்வாருதல், ஏரிகளில் உள்ள ஆகாயத் தாமரைகள் அகற்றும் பணி, குடிநீர் மோட்டார் பம்ப் செட்டுகள், வெள்ள பாதிப்பு பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து பொதுமக்களை மீட்க படகுகளை தயார் நிலையில் வைத்திருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது.

இந்தநிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்த கலெக்டர்த.பிரபு சங்கர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நெடுஞ்சாலைத்துறை சார்பாக, மாநில மற்றும் மாவட்ட இதர சாலைகள் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்படாமல், சேதம் அடையாமல் இருக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறை திருவள்ளூர் கோட்ட பொறியாளர் சிற்றரசு மேற்பார்வையில், திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து திருத்தணி பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட இதர சாலைகளில் மழைக்கால பாதிப்புகளை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக, திருத்தணி-சென்னை பழைய பைபாஸ் சாலையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறியாளர் அலுவலகத்தில் தயார் நிலையில் 1000 மணல் மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 100 சவுக்கு கொம்புகள், நீர் இறைப்பான் இயந்திரம், 2 பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், சாலை துண்டிப்பு, சாலையில் மரம் விழுந்தால் உடனடியாக சரி செய்ய ஏதுவாக நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர்கள், சாலைப் பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சாலைகள் பாதிக்கப்பட்டால் உடனடியாக அதனை சீரமைப்பதற்கான அனைத்து வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளன.

The post திருத்தணியில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன appeared first on Dinakaran.

Tags : Tiruthani ,Highways Department ,North-East Monsoon ,Tiruvallur ,Thiruthani ,Northeast Monsoon ,
× RELATED வடகிழக்கு பருவமழை : அனைத்துப் பள்ளித்...