×

கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை வழங்கினார். செய்தி மக்கள் தொடர்புத் துறையின் 2022-2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞர் அவர்களின் பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது” ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் திங்கள் 3-ஆம் நாளான்று வழங்கப்படும் என்றும், தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 லட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், முதலமைச்சரின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர், திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின்படி 2022-ஆம் ஆண்டிற்கான “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட திரைப்படத் துறையில் சுமார் 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ்பெற்ற ஆரூர்தாஸ் அவர்களுக்கு கடந்த 3.6.2022 அன்று கலைஞரின் பிறந்த நாளையொட்டி முதலமைச்சர் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை வழங்கிச் சிறப்பித்தார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் இந்த ஆண்டு கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 11.07.2024 அன்று உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திரையுலகில் 20,000-க்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், “தென்னிந்தியாவின் இசைக்குயில்” என்றும், “மெல்லிசை அரசி” என்றும் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசீலா அவர்களுக்கும், தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும், 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் 24.9.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

அந்த அறிவிப்பின்படி, முதலமைச்சர் இன்றைய தினம், கலைஞரின் நூற்றாண்டு நினைவாக கவிஞர் மு. மேத்தா அவர்களுக்கும், பின்னணி பாடகி பி.சுசீலா அவர்களுக்கும் 2023-ம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன் தலா 10லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு. இரா. வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post கவிஞர் மு.மேத்தா, பாடகி சுசீலாவுக்கு “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்” விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Kavinjar M. Metha ,Susila ,M.M. K. Stalin ,Chennai ,Kavinjar M. Mehta ,Susila Mu. K. Stalin ,Commemorative Art Department Magistrate Awards ,Public Relations Department ,Poet M. Metha ,
× RELATED பெண் டாக்டர் தற்கொலை