×

அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மலேரியா ஒழிப்பு இலக்கை நெருங்கும் தமிழ்நாடு: கடந்த 4 வருடங்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை

சென்னை: தமிழகத்தில் மலேரியா நோயை முழுமையாக ஒழித்திட தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றது. இதன் காரணமாக இந்தாண்டு மலேரியா நோயின் பாதிப்பு வெகுவாக குறைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தவகையில் இந்தாண்டு காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தென்காசி, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி உள்ளிட்ட 33மாவட்டங்களில் இந்த நோயினால் ஒருவர் கூட பாதிப்படையவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல், சென்னை, சேலம், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மலேரியா பரவல் பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டு சுகாதாரத்துறை தரப்பில் கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வரும் 2030ம் ஆண்டிற்குள் மலேரியா நோயை முற்றிலும் ஒழிக்கும் வண்ணம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த இலக்கை நெருங்கும் வகையில் கடந்த 2020 முதல் 2024ம் ஆண்டு வரை இந்நோயால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு 891 பேர் பாதிக்கப்பட்டனர். அதற்கு அடுத்தாண்டு 2021-ல் 772 பேர் பாதிக்கப்பட்டனர். 2022ம் ஆண்டு 354 பேரும், 2023ம் ஆண்டு 384 பேரும் மலேரியாவால் பாதிப்படைந்தனர்.

கடந்த காலங்களை காட்டிலும் குறைவாக இந்தாண்டு 233 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது: மலேரியா பரவலை முற்றிலும் ஒழிப்பதற்கான பல்வேறு ஆய்வுகளில் சுகாதாரத்துறை ஈடுபட்டுவருகிறது. இந்நோயின் பூஜ்ஜிய இலக்குடன் தமிழ்நாடு விளங்கும் வகையில் செயலாற்றி வருகிறோம். அதன்படியே, அரசும் மலேரியாவை கட்டுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த காலத்தை பொறுத்தவரை 1990 முதல் 1998ம் ஆண்டு கால கட்டங்களில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்திய இந்த நோயின் தாக்கத்தால் ஆண்டுக்கு 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. மலேரியா குறித்த பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இதன் பலனாக விரைவில் மலேரியா இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மலேரியா ஒழிப்பு இலக்கை நெருங்கும் தமிழ்நாடு: கடந்த 4 வருடங்களாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Kanchipuram ,Thiruvallur ,Vellore ,Tirupattur ,Ranipet ,Thiruvannamalai ,Tamil ,Nadu ,
× RELATED குத்தகை ரத்து விவகாரம் தொடர்பாக...