×

பெரம்பூரில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் இரவோடு இரவாக அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை

பெரம்பூர்: சென்னையில் பெய்த கனமழையால் பெரம்பூர் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் இரவோடு இரவாக அகற்றப்பட்டது. இதனால் காலையில் வாகன ஓட்டிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் சென்றனர். சென்னையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னையில் பல்வேறு தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக மேம்பாலங்கள் உள்ள பகுதிகளில் அதன் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து தடைபட்டது.

வடசென்னையில் எப்போதும் மழை பெய்தால் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதை, வியாசர்பாடி ஜீவா மேம்பால கீழ்பகுதி, வியாசர்பாடி கணேசபுரம் மேம்பால கீழ் பகுதி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்குவது இயல்பு. மாநகராட்சி ஊழியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் மோட்டார்களை அங்கு தயாராக வைத்திருப்பார்கள். உடனடியாக அங்கு தேங்கும் தண்ணீரை வெளியேற்றுவார்கள்.
அந்த வகையில் பெரம்பூர் ரயில்வே சுரங்கப்பாதையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சுடலைமணி உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்து, முரசொலி மாறன் மேம்பாலத்தின் மேல் பகுதியின் வழியாக வாகனத்தை திருப்பி விட்டனர். மேலும் திருவிக நகர் மண்டல செயற்பொறியாளர் சரவணன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின்மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி ஊழியர்கள் இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை தொடர்ந்து செயல்பட்டு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருந்த தேங்கிய தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதனால் நேற்ற காலை 6 மணிக்கு அலுவலகத்திற்கு செல்பவர்கள் வழக்கம்போல எந்தவித தடையும் இன்றி செல்ல முடிந்தது.

The post பெரம்பூரில் கனமழை காரணமாக சுரங்கப்பாதையில் தேங்கிய நீர் இரவோடு இரவாக அகற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Perampur ,Perambur ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை பெரம்பூரில் வங்கியின் ஏடிஎம் மெஷினை உடைத்து பணத்தை திருட முயற்சி