×

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சவக்குழிக்குள் இறங்கி மக்கள் ஜீவசமாதி போராட்டம்: பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி

தவளக்குப்பம், செப். 27: அரியாங்குப்பம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து ஒரு குடும்பத்தினர் சவக்குழி வெட்டி இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் செட்டிக்குளம் பகுதி வரை சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் வசிக்கும் செட்டிக்குளம் பகுதியில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட குடும்பங்களை காலி செய்து எதிரே உள்ள அரிக்கன்மேடு பகுதிக்கு செல்லும் வழியில் இடம் ஒதுக்கி தர அரசு முடிவு செய்தது. இதையடுத்து சம்பந்தப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இடத்தை காலி செய்யுமாறு கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அரசு மூலமாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செட்டிக்குளம் அருகே சவக்குழி வெட்டி குடும்பத்துடன் கையில் பெட்ரோல் மற்றும் டீசல் கேனுடன் இறங்கி நூதனமான முறையில் ஜீவசமாதி போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்பி பக்தவச்சலம் தலைமையிலான காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் சாலை விரிவாக்கம் போக மீதி உள்ள இடத்தை அது ஐந்து சென்ட் இடம் என்றாலும் பரவாயில்லை, அந்த இடத்தை எங்களுக்கு கொடுங்கள், அதுபோதும். எங்களுக்கு வேறு இடம் வேண்டாம் என்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரில் வந்து என உறுதி அளிக்க வேண்டும் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து துணை மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கூண்டோடு அப்புறப்படுத்த சப்-கலெக்டர் அர்ஜுன் ராமகிருஷ்ணன் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால் ஆவேசமடைந்த போராட்டக்காரர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் மற்றும் டீசலை தங்களது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனே சுதாரித்துக்கொண்ட போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி பலவந்தமாக குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் அருகே உள்ள குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். தொடர்ந்து அந்த பெண்ணையும், மற்றவர்களையும் போலீசார் மீட்டு அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பிறகு இதுசம்பந்தமாக அரியாங்குப்பம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சவக்குழிக்குள் இறங்கி போராட்டம், பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி, குளத்தில் குதித்து தற்கொலை முயற்சி போன்ற சம்பவங்களால் அரியாங்குப்பம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சவக்குழிக்குள் இறங்கி மக்கள் ஜீவசமாதி போராட்டம்: பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : Thavalkuppam ,Arianguppam ,Puducherry ,Veerambattinam ,Dinakaran ,
× RELATED இலவச மனைப்பட்டா வழங்காததால் மக்கள்...