×

செங்குன்றம் அருகே பரபரப்பு உணவு தயாரிக்கும் கிடங்கினை பாதுகாப்புத்துறையினர் ஆய்வு

புழல்: செங்குன்றம் அருகே பிரபல பிரியாணி நிறுவனத்திற்கு உணவு தயாரிக்கும் கிடங்கினை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கி வரும் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி நிறுவனத்தின் கொடுங்கையூர் கிளையில் பிரியாணி உட்கொண்ட 40க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதேபோல், பொன்னேரியில் இயங்கி வரும் கிளையில் பிரியாணி வாங்கி உட்கொண்ட 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பிற்குள்ளாகினர். இதில், பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கொடுங்கையூரில் அமைந்துள்ள எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டு, அந்த கிளைக்கு சீல் வைத்தனர்.

தொடர்ந்து, செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் அமைந்துள்ள உணவகத்தின் உணவு தயாரிக்கும் கிடங்கினை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கி வரும் எஸ்.எஸ்.ஹைதராபாத் பிரியாணி நிறுவனத்திற்கு உணவுகள் இந்த கிடங்கில் இருந்து தயாரிக்கப்பட்டு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்த, உணவு தயாரிக்கும் கிடங்கில் உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். உணவு தயாரிக்கும் கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ள இறைச்சியின் தரம், உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து சோதனை நடத்தப்பட்டது.

பின்னர், மாவட்ட நியமன அலுவலர் சதீஷ்குமார் நிருபர்களிடம் பேசியதாவது: கொடுங்கையூரில் உள்ள பிரபல உணவகத்தில் பிரியாணி உட்கொண்ட 40 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக காவல்துறை அளித்த தகவலின்பேரில், கொடுங்கையூர் தனியார் உணவகத்தில் ஆய்வு செய்து உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு, உணவு தயாரிக்கதாதால் அதற்கு உணவு தயாரித்து அனுப்பும் இந்த கிடங்கில் ஆய்வு செய்ததாக கூறினார். உணவு தயாரிக்கும் கிடங்கில் இருந்து உணவு பொருட்களை கிளைகளுக்கு எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு உரிமம் இல்லாமல் இயக்குவது கண்டறியப்பட்டுள்ளதாகவும், உடனடியாக உரிமம் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், உணவு தயாரிக்கும் பொருட்கள் ஆங்காங்கே கிழே சிதறி கிடந்ததை முறையாக பராமரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொன்னேரி கிளையிலும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தப்படும் எனவும் தெரிவித்தார். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையை செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்கள் அதிகாரிகளின் ஆய்வை படம் பிடிக்க கிடங்கிற்குள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post செங்குன்றம் அருகே பரபரப்பு உணவு தயாரிக்கும் கிடங்கினை பாதுகாப்புத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : department ,Food Safety Department ,Biryani ,S. S. Biryani ,Kundangaiur ,Hyderabad Biryani Company ,Security Department ,
× RELATED திருவேற்காடு அயனம்பாக்கத்தில் செயல்பட்ட அப்பு பிரியாணி கடைக்கு சீல்!!