×

டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் ராமநாதபுரம், அரக்கோணத்தில் இன்றுமுதல் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறை விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 2 இடங்களில் இன்று முதல் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் தற்போது 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. தரமான மதுபாட்டில்களை, நியாயமான விலைக்கு விற்பனை செய்ய டாஸ்மாக் கடைகளை நவீனமயமாக்கும் முயற்சிகளை டாஸ்மாக் நிர்வாகம் எடுத்து வருகிறது.

குறிப்பாக டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டது. இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் டாஸ்மாக் கணினிமயமாக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், 2 கடைகளில் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என்றும் டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:

டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்படவுள்ளது. புதிய அமைப்பு முதலில் நகரம் மற்றும் மாவட்டங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் தொடங்கப்படும். இது குறைபாடுகளைக் கண்டறிய உதவும். அனைத்து சிக்கல்களும் தீர்க்கப்பட்டவுடன், விரைவில் அனைத்து கடைகளிலும் செயல்படுத்தப்படும்.

டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்ய வேண்டும், அதில் ரசீதுகள் வரும். ஸ்கேன் செய்யாமல் பாட்டிலை விற்றால், சரக்குகளை தணிக்கை செய்யும் போது முரண்பாடுகள் தெரியவரும். தற்போது பில் நடைமுறை இல்லாத சூழலில், புதிய திட்டத்தின் படி வரவு, செலவு கணக்குகள் சரியான முறையில் பராமரிக்க உதவி செய்யும்.

மதுபாட்டில்களை ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். இதற்காக டாஸ்மாக கடைகளுக்கு முன்பு வரிசையில் நின்று மது வாங்க கட்டைகள் மூலம் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு பில் ராமநாதபுரம், அரக்கோணத்தில் இன்றுமுதல் சோதனை ஓட்டம்: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Bill Ramanathapuram ,Tasmak ,Arakona ,Chennai ,Tamil Nadu ,Arakonan ,Dinakaran ,
× RELATED பழைய குற்றாலத்தில் போக்குவரத்திற்கு...