×

ரூ.26.61 கோடி டெண்டர் மோசடி; முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

சென்னை: சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு மழை நீர் வடிகால் பணிகளுக்கு டெண்டர் விட்டதில் ரூ.26.61 கோடி மோசடி நடந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள விடப்பட்ட டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்ட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் புகார் மீது விசாரணை நடத்தினர். சென்னை மாநகராட்சியில் சென்னை மெகா நகர மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் சேதமடைந்த சாலைகள், சாலைகள் மறு சீரமைப்பு, நடைபாதைகள் பாலங்கள் புனரமைக்க மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கடந்த 24.10.2018ம் தேதி ரூ.290 கோடி மதிப்பிட்டில் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக ரூ.246.39 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருகர மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது.

அப்போது அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி மற்றும் நகராட்சி நிர்வாகத்துக்கான அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தார். இவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி அவரது கூட்டாளியான ஆர்.சந்திரசேகர் நடத்தும் கே.சி.பி.இன்ஜினியரிங் பிரவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு டெண்டர் விடும் வகையில் சாதகமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். ஆர்.சந்திரசேகர் அதிமுக கோவை ஊரக மாவட்ட இளைஞரணி செயலாளராக உள்ளார். கே.சி.பி. நிறுவனத்திற்கு டெண்டர் கிடைக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் உள்ள பொறியாளர்களை எஸ்.பி.வேலுமணி தவறாக பயன்படுத்தியுள்ளார். டெண்டர்களை வழங்கும் போது, ​​டெண்டர் அழைக்கும், ஏற்றுக்கொள்ளும் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப ஆய்வுக் குழு, தமிழ்நாடு டெண்டர் சட்டம், 1988 மற்றும் தமிழ்நாடு வெளிப்படைத்தன்மையை டெண்டர் விதிகள் 2000-ன் கீழ் ​​புயல் நீர் வடிகால் துறையின் 51 டெண்டர்கள் மற்றும் சேதமடைந்தவற்றை அனுப்புவதில் 2 டெண்டர்கள் ஆய்வு செய்யப்பட்டது. சாலைகள், சாலைகள் மறுசீரமைப்பு, நடைபாதைகள் ஆகியவற்றில் தமக்கும் மற்றவர்களுக்கும் பண ஆதாயத்திற்காக டெண்டர் வழங்கியது கண்டறியப்பட்டது.

பணிகளில் எம்சாண்ட் மணல் பயன்படுத்தப்பட்டது. ஆனால் ஆற்று மணல் விலைக்கு எம்சாண்ட் மொத்தமாக கொள்முதல் செய்து கான்கிரீட் சாலைகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமைச்சரின் நண்பரான ஒப்பந்ததாரர் ஆர். சந்திரசேகரனுக்கு ஆற்று மணல் விலையின் அடிப்படையில் பணம் செலுத்தப்பட்டது. எம்-சாண்ட் மற்றும் ஆற்று மணலின் சந்தை விலைக்கு இடையேயான வேறுபாடு மிகப்பெரிய அளவில் உள்ளது. ஆனால் டெண்டர் ஆவணத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட 20 ரெடி மிக்ஸ் கான்கிரீட் சப்ளையர்களில் யாரிடமாவது ரெடி மிக்ஸ் கான்கிரீட்டை வாங்கி இருக்கலாம். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் ஆர்எம்சி சப்ளையரிடமிருந்து எம்சாண்ட் பெறப்பட்டது. ஆர்எம்சி சப்ளையரிடமிருந்து பெறப்பட்ட விலையையும், சென்னை மாநகராட்சி கணக்கிட்ட சந்தையுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​விலைகளில் பெரும் வேறுபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

சென்னை மாநகராட்சியால் கணக்கிடப்பட்ட சந்தை விலை, சந்தையில் எளிதில் கிடைக்கும் உண்மையான சந்தை விகிதத்தை விட பல மடங்கு அதிகமாக இருந்தது. ஆர்எம்சி பொருட்களுக்கான மழை நீர் வடிகாலில் 51 டெண்டர்களில் சென்னை மாநகராட்சி கணக்கிட்ட சந்தை விகிதத்துடன் உண்மையான சந்தை விலையை ஒப்பிடும் போது (வேலைக்கான முக்கியப் பொருட்களில் ஒன்று) ஒப்பந்த மதிப்பில் 25 சதவீதம் மற்றும் 33 சதவீதம் என அரசுப் பணம் ரூ.26,61,99,866 மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களும், அதிகாரிகளும் சதி செய்து அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது உறுதியானது. ஒப்பந்தம் எடுத்த 3 நிறுவனங்களும் ஒரு ஐபி முகவரியில் இருந்து ஏலத்தில் கலந்து கொண்டதும் தெரியவந்தது. 73 எஸ்.டபிள்யூ.டிடெண்டர் பேக்கேஜ்கள் ஆகஸ்ட் 2018ல் வெளியிடப்பட்டன. 73 பேக்கேஜ்களில், 42 பேக்கேஜ்கள் டெண்டர் செய்தவர்கள், தங்களுக்குள் டம்மி டெண்டர்களைச் சமர்ப்பித்து, பகிர்ந்து, விநியோகம் செய்து, மற்றவர்கள் வெற்றிபெற உதவும் வகையில், 73 பேக்கேஜ்களில், 42 பேக்கேஜ்களை முன்கூட்டியே சரிசெய்தனர்.

நேர்மாறாக டெண்டர் விடப்பட்டதும் தெரியவந்தது. டெண்டர் கோப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதல் மாநகராட்சியில் பணியாற்றும் 10 பொறியாளர்கள் சரிபார்த்து தேர்வு செய்துள்ளனர். அதில் விதிகளுக்கு மாறாக 2018ம் ஆண்டில் குற்றச் சதியில் ஈடுபட்டு, சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணி மற்றும் பேருந்து வழித்தடச் சாலைப் பணிகளில் சட்டம் மற்றும் டெண்டர் விதிகளின்படி நிறுவப்பட்ட நடைமுறையை மீறி நியாயமற்ற முறையில் டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, இந்த மோசடியின் முக்கிய குற்றவாளியாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளார். தற்போது அவர் தொண்டாமுத்தூர் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். முன்னாள் அமைச்சரின் சதிக்கு உடந்தையாக சென்னை மாநகராட்சியின் செயல் பொறியாளர் ஏ.எஸ்.முருகன், சென்னை மாநகராட்சியின் ஓய்வு பெற்ற கண்காணிப்பு பொறியாளர் க. சின்னச்சாமி, மாநகராட்சியின் நிர்வாக பொறியாளர்கள் ஆர். சரவணமூர்த்தி, வி.பெரியசாமி, வி.சின்னதுரை, மாநகராட்சி பொறியாளர் நாச்சன், முன்னாள் செயல் பொறியாளர் சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், கண்காணிப்பு பொறியாளர்கள் எம்.புகழேந்தி மற்றும் ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் எல்.நந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள், 2018ம் ஆண்டில் மழை நீர் வடிகால் பணிகளுக்கு நியாயமற்ற முறையில் டெண்டர்கள் மற்றும் சேதமடைந்த சாலைகளை சீரமைத்தல், சாலைகள், நடைபாதைகளை சீரமைத்தல் மற்றும் அதன் மூலம் ரூ.26,61,99,866க்கு மோசடி மற்றும் பொதுப் பணத்தை தவறாகப் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது. அதைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உட்பட 11 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ரூ.26.61 கோடி டெண்டர் மோசடி; முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி appeared first on Dinakaran.

Tags : minister ,S. B. ,Velumani ,Chennai ,Former Minister ,Chennai Municipal Engineers ,Dinakaran ,
× RELATED போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு உடந்தை: பாஜக நிர்வாகி கைது