×

லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் ‘சைபர்’ தாக்குதல்; தைவானின் 5,000 ‘பேஜர்’ சாதனம் ெவடிகுண்டாக மாறியது எப்படி?.. அமெரிக்கா கைவிரிப்பு; இஸ்ரேல் உளவு அமைப்புக்கு தொடர்பு?

* பலி 11 ஆக உயர்வு; 400 பேர் கவலைக்கிடம்; 4,000 பேருக்கு காயம்

பெய்ரூட்: லெபனான், சிரியாவில் நேற்று ஒரே நேரத்தில் பேஜர்கள் ெவடித்து சிதறியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆகவும், உயிருக்கு ஆபத்தான நிலையில் 400 பேர் கவலைக்கிடமாகவும் உள்ளனர். தைவான் தயாரிப்பு ‘பேஜர்’ ெவடிகுண்டாக மாறி வெடித்து சிதறியதால், இதுகுறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இஸ்ரேலுக்கும், ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையே கடந்த 11 மாதங்களாக போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு, அண்டை நாடான லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பு ஆதரவளித்து வருகிறது. ஈரானின் ஆதரவைப் பெற்ற ஹிஸ்புல்லா, இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது.

ஹிஸ்புல்லா அமைப்பை, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே தடை விதிக்கப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. இந்நிலையில் நேற்று லெபனானில் ஒரே நேரத்தில், 100க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் ‘பேஜர்’ எனப்படும் தகவல்களை அனுப்ப பயன்படுத்தப்படும் மின்னணு சாதனம் வெடித்துச் சிதறியது. தீவிரவாதிகள் மட்டுமின்றி மக்களின் பாக்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த பேஜர்கள், லெபனான் மட்டுமின்றி அண்டை நாடான சிரியாவிலும் வெடித்து சிதறியது. நேற்றைய நிலவரப்படி ஹிஸ்புல்லா தீவிரவாத குழுவைச் சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் பலியாகினர். 2,750 பேர் காயமடைந்ததாக கூறப்பட்டது.

ஆனால் இன்றைய நிலவரப்படி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பேஜர்களில் இந்த வெடிப்பு நடந்துள்ளது. இந்த பேஜர்களை ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்தினர். ஆனால் யாரோ அவற்றை ஹேக் செய்து வெடிக்கச் செய்தனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈரான் தூதர் மோஜித்பா அமானி காயமடைந்தார். இறந்தவர்களில் பலர் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஆவர். மக்களின் பேஜர்களும் திடீரென வெடித்ததால் மொத்தம் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 400 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், பேஜர்களை பயன்படுத்துவோர், அதனை உடனடியாக தூக்கி எறியுமாறு லெபனான் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பை இஸ்ரேலின் சதி என்று ஹிஸ்புல்லா கூறியுள்ளது. அண்டை நாடான இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாக்களுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் இந்த சூழலில், இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளதால், இது இஸ்ரேலின் தீவிர தொழில்நுட்பத் (சைபர்) தாக்குதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதை லெபனான் அதிகாரிகள் உறுதியாகக் கூறினாலும், இதுகுறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க இஸ்ரேல் அரசு மறுத்துவிட்டது.

இதுகுறித்து ஹிஸ்புல்லாக்களின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் பாஸ்செம் கானமின் கூறுகையில், ‘ஹிஸ்புல்லா படையினர் பயன்படுத்தும் புதிய வகை பேஜர்கள் வெடித்துச் சிதறின. முதலில் அந்த பேஜர்கள் தானாகவே சூடேறின. பின்னர் அவை வெடித்துச் சிதறின. 30 நிமிடங்கள் வரை நடந்த இந்த வெடி சம்பவத்தில் லெபனானில் இரண்டு பெண்கள் உள்பட 11 பேர் பலியாகினர். காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,000-ஐ தாண்டியுள்ளது. அவர்களில் 400 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிரியாவில் நடந்த சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர்’ என்றார்.

இந்த வெடிவிபத்தின் பின்னணியில் இஸ்ரேல் உளவு அமைப்பான ‘மொசாட்’ மற்றும் ‘ஐடிஎஃப்’ ஆகியவற்றின் தொடர்புகள் இருப்பதாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. தைவானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 5,000 பேஜர்களில் சிறிய அளவிலான வெடிபொருட்களை இஸ்ரேல் வைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் பேஜரை ெவடிக்க வைத்து, சைபர் தாக்குதல் நடத்திய சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் தொழில்நுட்ப சாதனமாக பயன்படுத்தும் பேஜர், தற்போது வெடிகுண்டாக மாறி பலரது உயிரை பலி கொண்டது பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

பேஜர் என்றால் என்ன?
பேஜர் என்பது ரேடியோ சிக்னல் மூலம் செய்திகளை அனுப்பும் மற்றும் பெறுகின்ற தகவல் தொழில்நுட்ப சாதனமாகும். இதனை பீப்பர் அல்லது ப்ளீப்பர் என்று அழைக்கின்றனர். சிறிய அளவிலான டிஸ்பிளே மற்றும் சில கீ வசதிகளுடன் கூடியது. பேஜரின் பாதுகாப்பு என்பது அவ்வளவாக வலுவானதாக இல்லை. அதனால் எளிதாக அதனை ஹேக் செய்ய முடியும். அதனால் மோட்டோரோலா நிறுவனம் கடந்த 2001ம் ஆண்டில் பேஜர்கள் தயாரிப்பை நிறுத்தியது. ஆனால் இன்னும் சில நிறுவனங்கள் பேஜர்களைத் தயாரித்து வருகின்றன. அவசர சேவைகள் பிரிவில் தகவல் தொடர்புக்காக பேஜர்களை சில நாடுகள் பயன்படுத்துகின்றன.

பேஜர்களை 3 வகையாக பிரிக்கின்றனர். அதாவது முதல் வகை பேஜரில், செய்திகளை மட்டுமே பெற முடியும். அந்த செய்திக்கு பதிலளிக்க முடியாது. இரண்டாவது வகை பேஜரானது, செய்திகளைப் பெற முடியும், அதே நேரம் பதிலளிக்க முடியும். மூன்றாவது வகை பேஜரானது, தட்டச்சு செய்வதோடு, குரல் செய்திகளையும் பதிவு செய்து அனுப்பலாம். மொபைல் நெட்வொர்க் இல்லாமல் கூட பேஜர் வேலை செய்யும் என்பதால், மோசமான வானிலை மற்றும் தொலைதூர பகுதிகளில் தகவல்தொடர்பு வடிவமாக பயன்படுத்தப்படுகின்றன.

செல்போன் யுகத்தில் ஹிஸ்புல்லா பேஜரை பயன்படுத்துவது ஏன்?
இஸ்ரேல் – காசா இடையிலான போர் தொடங்கிய பின்னர், ஹிஸ்புல்லா அமைப்பினர் தனது உறுப்பினர்களிடம் செல்போன்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. இந்த ஆண்டு ஜூலை மாதம், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் தனது உறுப்பினர்களை செல்போன் சாதனங்கள் மற்றும் சிசிடிவியை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டார். ஏனெனில் இஸ்ரேல் உளவு ஏஜென்சிகளும், அமெரிக்காவும் அவற்றை ஹேக் செய்யக்கூடும் என்று அவர் கூறினார். இந்த காரணத்திற்காக, ஹிஸ்புல்லா அமைப்பினர் தங்களுக்கான தகவல்தொடர்புக்கு பேஜர்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஹிஸ்புல்லா என்றால் ‘கடவுளின் கட்சி’
ஹிஸ்புல்லா அமைப்பானது லெபனானில் இருக்கும் ஷியா அரசியல் மற்றும் துணை ராணுவ அமைப்பாகும். கடந்த 1980ம் ஆண்டுகளின் முற்பகுதியில் லெபனானை இஸ்ரேல் ஆக்கிரமித்த போது, ஈரானின் உதவியுடன் ஹிஸ்புல்லா கட்டமைக்கப்பட்டது. ஹிஸ்புல்லா என்றால் ‘கடவுளின் கட்சி’ என்று பொருள் கூறப்படுகிறது. லெபனானில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக செயல்பட்டு வருகிறது. சிரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் நேரடி ஆசி உண்டு. அதேசமயம் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள், ஹிஸ்புல்லா அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

பிரான்ஸ் விமான சேவை நிறுத்தம்
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிரான்சின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திலிருந்து பெய்ரூட் மற்றும் டெல் அவிவ் வரையிலான சேவைகளை நாளை வரை நிறுத்தி வைப்பதாக பிரான்ஸ் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. நிலைமை அங்கு சீரடைந்த பின்னர் மீண்டும் விமான சேவை செயல்படத் தொடங்கும் என ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

ஹிஸ்புல்லா எம்பியின் மகன் பலி
லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அலி அம்மார் என்பவரின் மகன் மஹ்தி என்பவர், பேஜர் வெடித்து சிதறிய தாக்குதலில் பலியானார். மேலும் லெபனானின் இரண்டு மூத்த அதிகாரிகளின் மகன்கள் காயமடைந்ததாக ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதுகுறித்து எம்பி அலி அம்மார் கூறுகையில், ‘இது லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் புதிய போர்; இதற்கு சரியான நேரத்தில் சரியான முறையில் பதிலடி கொடுக்கப்படும்’ என்றார்.

தகவலை திரட்டும் அமெரிக்கா
பேஜர் வெடித்து சிதறிய சம்பவம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், ‘இந்த சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என்று அமெரிக்காவுக்குத் தெரியாது. ஆனால் இந்த சம்பவம் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம். அமெரிக்காவுக்கும், இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரியாது. எப்படி இந்த சம்பவம் நடந்திருக்கக்கூடும் என்பது குறித்த உண்மைகளை சேகரிக்கும் சர்வதேச பத்திரிகையாளர்களை போன்றே, நாங்களும் தகவல்களை சேகரித்து வருகிறோம். மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றங்களை அதிகரிக்க அமெரிக்கா விரும்புவதில்லை. அப்பகுதியின் ஸ்திரத்தன்மையை ஈரான் சீர்குலைக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கிறோம்’ என்றார். இதற்கிடையே அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரின் ஜீன்-பியர் கூறுகையில், ‘இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவிற்கும் இடையே நடக்கும் மோதலுக்கு தூதரக ரீதியிலான தீர்வு தேவை’ என்றார்.

தைவான் பேட்டரியில் வெடிபொருளா?
சிரியா, லெபனானில் வெடித்து சிதறிய ேபஜர்களில் ெபரும்பாலானவை தைவானில் தயாரிக்கப்பட்டவை ஆகும். லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு சமீபத்தில் தான் தைவானிடம் இருந்து 5,000 பேஜர்களை வாங்கியதாகவும், இந்த பேஜர்களை ஹிஸ்புல்லாவிற்கு சப்ளை செய்யும் முன்பாக அதனுள் சிறிய அளவிலான வெடிப்பொருட்களை வைத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் இஸ்ரேலிய உளவுத்துறை செயல்பட்டுள்ளதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் கூறுகின்றனர். மேலும் இஸ்ரேலிய உளவு நிறுவனம், பேஜர் மின்னணு சாதனத்தின் பேட்டரிகளில் அதிக திறன்கொண்ட வெடிக்கும் பொருளான ‘பிஇடிஎன்’ என்ற பொருளை வைத்திருந்ததாகவும், தூரத்திலிருந்து பேட்டரிகளின் வெப்பநிலையை உயர்த்தி அதனை வெடிக்கச் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ், இஸ்ரேல் படைகள் மக்கள் பயன்படுத்தும் தகவல்தொடர்பு சாதனங்களை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதலின் நோக்கம் என்ன?
தைவான் நாட்டின் பேஜர் தயாரிப்பான கோல்ட் அப்பல்லோவிடம் இருந்து ஹிஸ்புல்லாவிற்கு அனுப்பப்பட்ட பேஜர்களின் தொகுப்பிற்குள் சிறிய அளவிலான வெடிபொருட்களை இஸ்ரேல் உளவு அமைப்பின் மூலம் மறைத்து வைத்திருந்ததாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட தொலைவிலிருந்து, அந்த பேஜர்களை வெடிக்கச் செய்ய கன்ட்ரோல் சுவிட்ச் பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளது. மேலும் இந்த தாக்குதல்களின் நோக்கம் என்னவென்றால், ‘நாங்கள் எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும், உங்களைத் தொடர்பு கொள்ள முடியும். மேலும் ஒரு பொத்தானை அழுத்தினால் உங்களை எதுவும் செய்ய முடியும்’ என்ற ஒரு பாடத்தை ஹிஸ்புல்லாவிற்கு கொடுத்துள்ளனர் என்று சர்வதேச புலனாய்வு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

The post லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் ‘சைபர்’ தாக்குதல்; தைவானின் 5,000 ‘பேஜர்’ சாதனம் ெவடிகுண்டாக மாறியது எப்படி?.. அமெரிக்கா கைவிரிப்பு; இஸ்ரேல் உளவு அமைப்புக்கு தொடர்பு? appeared first on Dinakaran.

Tags : SIMULTANEOUS 'CYBER' ATTACK ,LEBANON, SYRIA ,TAIWAN ,America ,Israel ,Beirut ,Lebanon ,Syria ,Cyber ,Dinakaran ,
× RELATED தைவான் நாட்டில் 6.3 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்