உடுமலை: தென்மேற்கு பருவ மழையால் பாலாற்றின் கரையோரம் பசுமை திரும்பி உள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை மற்றும் அதன் சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை பெய்தது. குறிப்பாக பாம்பாறு, சின்னாறு,தேனாறு, கொடைக்கானல் மலையின் ஒரு பகுதி, கேரள மாநிலத்தில் காந்தலூர், மறையூர், மூணார் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை நீடிக்கவே அமராவதி, ஆழியாறு.,சோலையார், அப்பர் பவானி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிந்தது.
பிஏபி பாசன திட்ட அணைகள் நிரம்பியதால் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மொத்தம் 60அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 43 அடி தண்ணீர் உள்ளது. 2ம் மண்டல பாசனத்திற்கு வருகிற 19ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள ராவணாபுரம், அர்த்தனாரிபாளையம்,தேவனூர் புதூர், ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பத்து மேற்பட்ட கிராமங்களில் உள்ள ஏறத்தாழ 350 ஏக்கர் விளைநிலங்களுக்கு பாலாற்றின் மூலம் பாசன வசதி கிடைத்து வந்தது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து திருமூர்த்தி மலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் கடந்த மாதம் 4 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பாலாற்றின் கரையோரம் உள்ள கிராமங்களில் போர்வெல், கிணறுகள், குளம், குட்டைகளில் நீர்மட்டம் அதிகரித்ததால் பாலாற்றின் கரையோர கிராமங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. தற்போது ஆடி பட்ட நெல், மக்காச்சோளம், காய்கறிகள் பயிரிட ஏதுவாக பாலாற்றில் தண்ணீர் ஓடுவது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
The post தென்மேற்கு பருவ மழையால் பாலாற்றின் கரையோரம் பசுமை திரும்பியது appeared first on Dinakaran.