திருப்புவனம்: இறந்த மகளின் ஆசையை நிறைவேற்ற, அவருக்கு கட்-அவுட் வைத்து பூப்புனித நீராட்டு விழா நடத்திய தாயை, உறவினர்கள், பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த தொழிலாளி பாலகிருஷ்ணன் – ராக்கு தம்பதி மகள் பாண்டிச்செல்வி. வேறு குழந்தைகள் இல்லை. சிறு வயதில் இருந்தே பாண்டிச்செல்விக்கு அலங்காரம் செய்வது என்றால் மிகவும் பிடிக்கும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்லும்போது தாய் ராக்குவிடம், பெரியவளானதும் தனக்கும் இதுபோன்று விசேஷம் நடத்த வேண்டும் என அடிக்கடி கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும்போது, திடீரென உடல்நலக்குறைவால் பாண்டிச்செல்வி உயிரிழந்தார்.
இதனால் மனமுடைந்த ராக்கு, மகள் தன்னுடனேயே இருப்பதாக எண்ணி வாழ்ந்து வருகிறார். தற்போது மகள் உயிருடன் இருந்தால் பூப்பெய்தி இருப்பார் என எண்ணி, அவருக்கு பூப்புனித நீராட்டு விழாவை அன்னையர் தினத்தில் நடத்த திட்டமிட்டார். கடந்த 12ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை வெகு விமரிசையாக நடத்தினார். உறவினர்கள் அனைவரையும் பத்திரிகை அடித்து அழைத்து தனியார் கல்யாண மண்டபத்தில் மகளை போன்றே கட்-அவுட் செய்து, அதற்கு பட்டுச்சேலை, நகை, மாலை அணிவித்து விழாவை நடத்தினார். உறவினர்கள் கொண்டுவந்த நகை, சேலை உள்ளிட்ட சீர்வரிசைகளும் வைக்கப்பட்டிருந்தன. பின்னர் உறவினர்களும் பாண்டிசெல்வியின் கட்-அவுட்டுடன் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The post தாய் பாசத்திற்கு ஈடு இணை ஏது? உயிரிழந்த மகளுக்கு உறவினர்களை அழைத்து பூப்புனித நீராட்டு விழா: அன்னையர் தினத்தில் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.