சென்னை: தெற்காசியாவில் முதல் முறையாக ரோபோ உதவியுடன் மார்பு காம்பை அகற்றாமல் மார்பக புற்று நோய் உண்டாக்கும் செல்களை நீக்கும் சிகிச்சையை அப்போலோ புற்றுநோய் மையம் செய்து வருகிறது. இதுபற்றி விளக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் புற்றுநோயியல் அறுவைசிகிச்சை துறை முதுநிலை நிபுணர் டாக்டர் வெங்கட், டாக்டர்கள் பிரியா கபூர், முக்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதுநிலை நிபுணர் வெங்கட் பேசியதாவது: ரோபோ உதவியுடன் செய்யப்படும் அறுவை சிகிச்சை மிகச்சிறப்பான விளைவுகளை சாத்தியமாக்குகிறது. இதன் மூலம் அறுவை சிகிச்சை செய்த பிறகு நோயாளி 24 மணி நேரத்திற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார்.
மிகச்சிறிய கீறல்கள் வழியாக ஒட்டுமொத்த மார்பகக் கட்டியையும் இந்த செயல்முறை அகற்றுவதோடு, மார்பகத்தின் தோலிலும் மற்றும் மார்பு காம்பிலும் உணர்வினை தக்கவைத்துக்கொள்ளும் சாத்தியத்தையும் அதிகரிக்கிறது. இந்த புதுமையான உத்தியின் காரணமாக, மார்பு காம்பு தோல் மற்றும் மார்பகம் ஆகியவை அறுவைசிகிச்சைக்குப் பிறகும்கூட அப்படியே இருக்கும். மார்பகத்தின் முழுமையான வடிவமைப்பும் மாறாமல் பாதுகாக்கப்படுகிறது. இது வரை 12 நோயாளிகளுக்கு 16 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை செலவாகும். இது வரை செய்யப்பட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளும் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது என்றார்.
The post தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ உதவியுடன் மார்பகத்தை அகற்றாமல் நவீன புற்றுநோய் அறுவை சிகிச்சை: அப்போலோ புற்றுநோய் மையம் தகவல் appeared first on Dinakaran.