×

கலசபாக்கம் பகுதியில் ₹55.88 கோடி மதிப்பீட்டில் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தீவிரம்

*26 கிராமங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி

கலசபாக்கம் : கலசபாக்கம் பகுதியில் ரூ.55.88 கோடி மதிப்பீட்டில் செய்யாற்றின் குறுக்கே 3 இடங்களில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் பகுதியில் செய்யாற்றின் கரையோரம் பல கிராமங்கள் உள்ளன. இங்கு மழைக்காலங்களின்போது ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுப்பு ஏற்பட்டால் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் சாலையை கடக்க முடியாமல் தவிக்கின்றனர். பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில் கிராம மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று பூண்டி மற்றும் பழங்கோயில் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்க ரூ.19.92 கோடி மதிப்பிலும், கீழ்பொத்தரை மற்றும் பூவாம்பட்டு கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.20.91 கோடி மதிப்பீட்டிலும் உயர் மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கீழ்தாமரைப்பாக்கம் மற்றும் தென் மகாதேவமங்கலம்- கோயில்மாதிமங்கலம் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே ரூ.16.05 கோடியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3 மேம்பாலங்கள் மொத்தம் ரூ.55.88 கோடி மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணிகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. தற்போது 3 இடங்களிலும் பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குறிப்பாக பூண்டி மற்றும் பழங்கோயில் கிராமங்களை இணைக்கும் வகையில் செய்யாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் தற்போது அடித்தளம் அமைக்கப்பட்டு பரிசோதனை செய்வதற்காக 2,600 டன் மணல் மூட்டைகள் அடுக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன்படி ஆய்வு முடித்து அடுத்தகட்டமாக பாலம் கட்டும் பணிகள் தொடங்கி சில மாதங்களில் முடிந்துவிடும் என்பதால் 26 கிராமங்களை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

₹10.45 கோடியில் உயர் மட்ட பாலம்

கலசபாக்கம் ஒன்றியம் காலூர் ஊராட்சியில் செய்யாற்றை கடந்து செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது ரூ.10.45 கோடி மதிப்பீட்டில் அப்பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை இன்று துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி தொடங்கி வைக்கிறார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post கலசபாக்கம் பகுதியில் ₹55.88 கோடி மதிப்பீட்டில் செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kalasapakkam ,
× RELATED கோடை மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி...