நன்றி குங்குமம் ஆன்மிகம்
ஸ்ரீஅனுமன் ஜெயந்தி – 11.1.2024
துளசிதாசர் தனது ‘இராம சரிதமனஸ்’ என்னும் ராமாயணத்தில் அனுமனது. பல்வேறு குணச் சிறப்புகளைப் புகழ்ந்து கூறுகிறார். அடுத்து, தாம் இயற்றிய ‘அனுமன் சாலிஸா’ காவியத்தை தொடங்கும் போதே, ‘ஜய அனுமான் ஞான குண சப’ என்றுதான் தொடங்குகிறார். மகான் தியாகய்யர் தமது ‘பாஹி ராம தூத’ என்கிற கீர்த்தனையில் ஆஞ்சநேயரை ‘பரம பாகவத வரேண்ய’ என்று புகழ்ந்து பாடுகிறார்.
சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்பது ஒரு கலை. அரிய கலை. அந்தக் கலையை தெய்வ அனுக்கிரகத்தால் பெற்றவர், அனுமன் என்பதால் அவரைச் ‘சொல்லின் ெசல்வன்’ என்று கவிச்சக்ரவர்த்தி கம்பர் பெருமான் அழைக்கிறார். இதை ராமாயணக்கதையில் அவர் தோன்றும் இடங்களில் நிரூபிக்கிறார்.
வால்மீகி ராமாயணத்தில், அனுமனை ராமபிரான் முதன் முறையாக அழைக்கும் சொல் ‘சௌம்ய’ என்பதாகும். இதற்கு அழகன், ஜொலிப்பவன், ஒளிபோல் பிரகாசிப்பவன், புத்திமான், அறிவாளி, சந்திரன் போல் குளிர்ந்தவன் என்று பல அர்த்தங்கள் உண்டு! கம்பராமாயணத்தில் முதன் முதலாக அனுமனைக் கண்ட ராமபிரான், ‘அனுமன் ஒரு சிறந்த அறிவாளி’ என்று லட்சுமணனிடம் கூறி மகிழ்கிறார்.
தன் நண்பன் சுக்ரீவனின் உதவிக்காக ராம – லட்சுமணரைச் சந்தித்த பொழுது, சுக்ரீவனை `தர்மாத்மா’ என்று அனுமன் அறிமுகப்படுத்துகிறான். பார்த்ததுமே ராமன், தர்மாத்மா என்று அறிந்து கொள்வதால், அவருடன் நட்பு விரும்புகிறவன் தர்மாத்மாவாக இருந்தால்தான் ராமர் சம்மதிப்பார் என்பதற்காகச் சுக்ரீவனை ‘தர்மாத்மா’ என்கிறார். அனுமனின் அந்த ஒரு சொல்லிலேயே அவரது மதிநுட்பத்தை உணர்ந்து கொள்கிறார். உடனே ராமன், லட்சுமணனிடம் `சொல்லின் செல்வன்’ அனுமனின் சாதுர்யத்தைப் புகழ்கிறார்.
அனுமன் பேசும் பொழுது முகம், கண், நெற்றி புருவம் மற்றும் எந்த அங்கங்களிலும் ஒரு குறைகூட காணப்படவில்லை. சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், நீட்டிப் பேசாத வகையில் மத்யஸ்வரத்தில், மனதில் உள்ளது வாக்கில் வரும் வகையில், வார்த்தைகள் படபடப்பாயும் இல்லாமல் மந்தமாயும் இல்லாமல், மூன்று ஸ்தானங்களாலும் தன் அபிப்ராயத்தை அனுமன் வெளியிடுகிறார்.
எந்த அவதாரம் எடுக்கிறாரோ, அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளுதல் இறைவனது பண்பு. புவியில் மானிட தர்மப்படி, எந்த உறுதி மொழிக்கும் அக்னிதான் சாட்சி என்பதை உணர்ந்தவர் அனுமன். எனவே, மரக்கிளையை முறித்து, அக்னி உண்டு பண்ணி, அதை வலம் வரச் செய்து சுக்ரீவனுக்கும் ராமனுக்கும் தோழமை ஒப்பந்தத்தை நடத்தி வைக்கிறார் அனுமன். நட்பு உறுதியானது. அனுமனை, ‘சொல்லின் செல்வர்’ என்று ராமர் முதலிலேயே கண்டறிந்துவிட்டார்.
அனுமனின் சொல்லாற்றுள் அவரது புகழ்மிகு வெற்றிக்குக் காரணமாகிறது எனலாம். சுழுங்கிய சொற்களிலே செறிந்த பொருளை உணர்த்தும் ஆற்றல் உடையவர் அனுமன். இடத்துக்கும், காலத்துக்கும், மக்களுக்கும் ஏற்பப் பேசும் அவரது பேராற்றலை நாம் ஆங்காங்கு கண்டு மகிழலாம். பொருளற்ற பயனற்ற சொல்லினை அனுமன் எப்பொழுதும் பேசியதே இல்லை.
அனுமன் எப்பொழுதும் தன் சொற்களை ஆராய்ந்தே கூறுவார். தன் கருத்தினை வலியுறுத்தியும் பேசுவார். காரணகாரியம் காட்டி தகுதியான சமயத்தில் சலிப்பின்றியும் பேசுவார். தன் பேச்சை வகைப் படுத்திக் கூறும் திறனும் உண்டு அனுமனுக்கு! ராம – லட்சுமணரைக் கண்டதும் முதலில் அஞ்சி ஓடிய சுக்ரீவனிடம், அவர்களின் பெருமைகளையெல்லாம் பேசி முடிந்த பின்பே அவர்கள் வந்த நோக்கத்தினைப் புலப்படுத்துகின்றார் அனுமன்.
முதலிலேயே இவர் உதவி நாடி வந்தவர்கள் என்று நவின்றால், தன்னை நாடி வந்தவர்கள் தானே எனச் சுக்ரீவன் தாழ்வாக எண்ணலாமல்லவா? கால மறிந்து கூறுவதிலும் அஞ்சனை மைந்தன் அனுமன் கைதேர்ந்தவர். தன் துணை பிரிந்த துயரில் இருந்ததால் ராமர், சுக்ரீவன், துயரினை, நன்குணர இயலும் என்பதை அறிந்த அனுமன் அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு, ‘‘நின்ற நீதியாய் நெடுது உண்டு கேட்டியால்’’ என்ற முன்னுரையுடன் இடமறிந்து பேசுகிறார் அனுமன். ஆகா… என்னே அவர் பேச்சின் வலிமை!
அனுமன் இரு பொருள்படப் பேசுதலிலும் வல்லவர். முதலில் ராம – லக்குவர்களை வரவேற்ற பொழுது “கவ்வை இன்றாக நுங்கள் வரவு’’ என வரவேற்கும் அழகைப் பாருங்கள். இதன் பொருள் ‘உங்கள் வரவு துன்பம் தராதிருக்கட்டும்’ என்பதொன்று. மற்றொன்று உங்கள் துன்பமும் நீங்கட்டும்’ என்பது. அவர் பேச்சில்தான் என்ன அழகு!இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப, மொழியும் அனுமனின் சொல்வன்மை மிகச் சிறப்பாக அமைந்துள்ளமைக்கு அதன் தன்மையும் ஒரு காரணமாய் அமைகிறது.
அனுமன், ராமனிடம் முதலில் சந்தித்த பொழுது, ‘‘எம் குலத்தலைவற்கு உம்மை யாரென விளம்புகேன்? வீரர் நீர் பணித்தீர்’’ என்று வினவும் பொழுது, அச்சொற்கள் எத்துணை பணிவுடன் மிளிர்கின்றன! பெரியவர்களிடம் நேரிடையாக நீங்கள் யார் எனக் கேட்பது அறிவுடைமையாகாதே! ஆகவே நயமாக, நாகரிகமாக தாங்கள் யார் என்று என் தலைவனிடம் சொல்லட்டும் என்று கேட்கிறார். அனுமன் பேச்சின் தன்மை பாருங்கள்! எவ்வளவு அழகு!
இவ்வண்ணம், அனுமனின் சொல்வன்மை முழுமையும் ஆக்கத்திற்கே பயன் படுவதைக் காணலாம். தருமத்தின் தன்மை, தீர்ப்பவரின் புகழ் இதனால் பன்மடங்கு ஓங்குகிறது காலமறிந்து, இடனறிந்து எதிர் நிற்போர் நிலையறிந்து அவர் கூறும் சொற்கள் அவன் ஆழ்ந்த அறிவைப் பறை சாற்றுகின்றன. அசோகவனத்தில் சீதையைக் காண்கிறார் அனுமன். செவ்வை சூடுவார் எனும் மகான் ஸ்ரீபாகவதம் 4-வது ஸ்கந்தம் 9-10 அத்தியாயங்களில் ராமன் கதையைக் கூறியிருக்கிறார்.
பயங்கர அரக்கியர்களால் சூழப்பட்டு மாயாவியான ராவணனின் கடுஞ்சொற்கள் கேட்டு, மதிகலங்கி, மருண்டமானாய், நீர் சோர நிற்கும் சீதைக்கு முதலில் தன்மீது நம்பிக்கை பிறக்கச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவள் தன்னையும் மாயாவி ராவணன் எடுத்து வந்திருக்கும் தோற்றம் என நினைத்து அஞ்சி, கூச்சலிட்டால் வந்த காரியம் கெட்டுவிடும் என்று எண்ணுகிறார் அனுமன்.
அவர் வாக்கு வன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டு பெரியாழ்வார் அருளிச் செய்த ‘‘பெரியாழ்வார் திருமொழியில்’’ மூன்றாம் பதிகத்தின் பத்தாம் திருமொழி ‘நெறிந்த கருங்குழல்’ என்பது. அத்திருப்பத்தின் இராமபிரான் வாக்காக சீதாப் பிராட்டிக்கு அனுமன் தெரிவித்த அடையாளம் ஆகும். இப்பாசுரத்தில் ஜனகனின் வில்லை முறித்து சீதையை மணம் புரிந்ததும், பட்டாபிஷேகம் தடைப்பட்டு வனம் வந்ததும், பொன் மானாக வந்ததும், அதனால் ராமரை விட்டுப் பிரிந்ததையும் மிக அழகாக பெரியாழ்வார் கூறுகிறார். இதைக் கேட்டதுமே புண்பட்ட நெஞ்சினால் வருந்தியிருந்தவளுக்கு பஞ்சினால் தடவி விட்டது போல் ஓர் ஆறுதல் உண்டாகிறது பிராட்டிக்கு!
தனக்கு மிகவும் பிரியமான ராமரது கதையை அழகாக, உருக்கமாக, இனிய சொல்லெடுத்துக் கூறிய சொல்லின் செல்வன் அனுமனை அச்சத்தோடு பார்க்காமல் ‘‘இவன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன்’ என்கிற உணர்வு சீதைக்குப் பிறக்கிறது. அப்பொழுது ராமன் கொடுத்த கணையாழியை சீதாப் பிராட்டியிடம் அளிக்கிறார் அனுமன் கணையாழியைக் கண்டதுமே கவலை நீங்கப் பெற்று பரவசம் அடைந்த அன்னை சீதை, அதை உச்சிமேல் வைத்துக் கொண்டு உகந்தாள் – என்கிறார் பெரியாழ்வார்.
வால்மீகி ராமாயணத்தில் கணையாழி கொடுக்கும் படலத்தில் வால்மீகி அனுமனை, ‘‘ஒருவராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு புத்தி உடையவர்’’ என்கிறார் கணையாழியை சீதாப் பிராட்டியிடம் கொடுத்து அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் அனுமனின் சொல் நயம் வெளிப்படுகிறது என்று போற்றுகிறார் வால்மீகி.!‘எடுத்ததுமே நான் குரங்குதான் என்கிறார். கபடசந்நியாசியாக வந்து உன்னைக் கவர்ந்து சென்று ராவணன் அல்ல என்கிறார்.
ராமனின் தூதன் நான் ராமபக்தன். ராமனின் பெயர் பொறிக்கப்பட்ட மோதிரத்தைப் பாருங்கள் தேவீ!’ என்கிறார். அனுமன் சீதைக்கு இந்த மோதிரத்தின் விசேஷம் தெரியும் என்பது அனுமனுக்கும் தெரியும். ‘‘சீதை அந்தக் கணையாழியில் தன் மனதிற்கு இனியானைக் காணலாம் உங்களுக்கு நம்பிக்கை அளிப்பதற்காக ராமனால் என்னிடம் தரப்பட்டது’’ என்கிறார் அனுமன்.
துக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் சீதைக்கு நம்பிக்கை தன் மீது பிறக்க வேண்டும் என்பதற்காக அனுமன் கூறும் ஒவ்வொரு சொல்லும் அவரது புத்திசாதுரியத்தையும், சொல்வளத்தையும் எடுத்துக் காட்டுகிறது. வாடிய பயிருக்கு நீர் ஊற்றுவதைப் போல் அனுமனின் இனிய சொற்களால் புத்துயிர் பெற்ற சீதை அளவற்ற ஆனந்தமடைந்தாள் என்று கம்பர் பெருமான் அற்புதமாக வர்ணித்திருக்கிறார். சீதாப் பிராட்டிக்கு தைரிய வார்த்தைகள் கூறி அவள் ராமருக்குக் கொடுக்கும் படி சொல்லிக் கொடுத்த சூடாமணியை பெற்றுக் கொண்டார் அனுமன். ராமனை அடைந்த அனுமன், பிரிவுத் துயரால் வாடும் ராமனது வருத்தம் உடனே நீங்கும் படி, ‘‘திருஷ்டா சீதா’’ என்று கூறுகிறார் சொல்லின் செல்வன்.
கணக்காக சொல்லைப் பயன்படுத்தும் ஆற்றல் அதில் உண்டாகும் பயன் அறிந்தவர் அல்லவா அனுமன்? ‘சீதா’ என்று கூறியதுமே அடுத்ததாக என்ன செய்தி வருகிறார். அவனைப் பற்றி என்று துடித்து விடுவார் ராமர் என்பதை உணர்ந்து ‘‘கண்டேன் சீதையை!’’ என்று கூறுகிறார் அனுமன். ராமாயண காவியத்தில், ராம – லட்சுமணர்களை முதன் முதலாகக் கண்டறிந்த போது கூறிய சொல்லின் செல்வன் பேசிய சொற்களும், இலங்கை அசோக வனத்தில் இருந்த சீதையை முதன் முதலாகக் கண்டு தரிசித்த அனுமன் சொல்லாற்றலையும் கண்டோம்.
அன்றும், இன்றும், என்றும் நமக்கு வேண்டியது பலம். ஆத்மபலம், மனோ பலம், புத்திபலம், தேக பலம், பிராண பலம், சம்பத்பலம். இந்த ஆறு பலங்களையும் பெற்று வீரதீர சூரர்களாக வாழ ஆஞ்சநேயருடைய அருட்பார்வை கண்டிப்பாக வேண்டும். உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் பூரண மனிதனாகப் பொலிய வேண்டும். ஆக, நாம் அனுமனை இலட்சிய புருஷனாக கண்டு கொள்வதே தக்க நெறியாகும்.
உடல் வலிமை இருக்கும். அறிவு இருக்காது. அறிவு இருக்கும் அம்மனிதனுக்கு அடக்கம் இருக்காது. ஒருவன் வைதீக நெறியில் நிற்பான். கலைகளில் வெறுப்பு தோன்றும். எல்லாம் திகழ்ந்து காட்சி அளிக்கும். ஆனால், ஆண்டவனிடம் பக்தி இருக்காது. தனக்கென வாழாப் பேரறிஞனாகத் திகழமாட்டான். அனுமன், தான் பூரணமான மனிதன் ஒரு லட்சிய புருஷன்.
அவனைப் போல் நாம் விளங்க வேண்டும். ஆஞ்சநேய பிரபாவத்தைச் சொல்ல, ஆயிரம் நாக்கு படைத்த ஆதிசேஷனாலும் முடியாது. ‘‘ஆஞ்சநேய பிரபாவம்’’ என்ற இருவார்த்தைகள் சாட்சாத் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியாலேயே சொல்லப்பட்டதாகும். அனுமனை வணங்குபவர்களுக்கு அவர் என்னென்ன அருள் தருகிறார் என்று இந்த ஸ்லோகம் கூறுகிறது.
‘‘புத்திர் பலம் யசோதைர்யம் நிர்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹநுமத்ஸமரணாத் பவேத்’’
அதாவது, புத்தி, பலம், புகழ், மன உறுதி, அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்பு, வாக்கு வன்மை இத்தனையும் தருகிறார் அனுமன்.
தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்
The post ‘‘சொல்லின் செல்வன் அனுமன்’’ appeared first on Dinakaran.