×

சின்னமனூரில் 1,200 ஆண்டு பழமையான கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்: திமுக அரசுக்கு ஆன்மீக அன்பர்கள் பாராட்டு

சின்னமனூர்: சின்னமனூரில் 1200 ஆண்டு பழமையான கோயிலில், 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்கான புனரமைப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கு நடவடிக்கை எடுத்த திராவிட மாடல் திமுக அரசுக்கு ஆன்மிக அன்பர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், சின்னமனூரிலிருந்து மார்க்கையன்கோட்டை செல்லும் சாலையில், 1200 ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு பூலானந்தீஸ்வரர் உடனுறை சிவகாமியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் 1,200 ஆண்டுகளுக்கு முன், அரிகேச பாண்டிய மன்னர் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் முன்புறம் மிகப்பெரிய தெப்பக்குளம் உள்ளது. மதுரை மீனாட்சியம்மனின் மறுபிம்பம் என சிவகாமியம்மன் அழைக்கப்படுகிறார். இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் உள்ளது. தினசரி ஒதுவார்களுடன் 6 கால பூஜை நடக்கிறது. இந்த கோயிலில் சித்திரை மாதம் 18 நாட்கள் ஆடிப்பெருந்திருவிழா 18 மண்டகப்படிதாரர்களின் உதவியோடு சிறப்பாக நடத்தப்படுகிறது. அப்போது 2 நாட்கள் தேரோட்டம் நடக்கும். பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வடம் பிடித்து இழுப்பர்.

நான்கு ரதவீதிகளில் செல்லும் தேர் நகரில் உள்ள செக்காமுக்கு, நடுத்தெரு, கண்ணாடி கடைமுக்கு, மெயின் ரோட்டை அடைந்து தேரடியில் நிலை அடையும். பிணிகள் போக்கவும், திருமணத்தடை அகலவும், மழை வளம் பெருகி, இருபோக நெல் சாகுபடி நடக்கவும் வேண்டி தேர் இழுப்பர். இந்நிலையில், கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதன்பின் 12 ஆண்டுகளில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். பல்வேறு நிர்வாகச் சிக்கல்களாலும், அப்போதைய அதிமுக அரசின் அலட்சியத்தாலும் முறையாக கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2021ல் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் பொதுமக்கள், பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் சேர்ந்து கோயிலை புனரமைத்து விரைவில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமையில் மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள், உபயதாரர்கள் அனைவருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி பெரும் முயற்சி எடுத்தார். இது குறித்து தமிழக சட்டசபையில் முதல்வரிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து கோயில் புனரமைப்பு பணிக்கு உத்தரவிட்டது.

இதன்படி, ரூ.1.25 கோடி மதிப்பில் உபயதார்களின் உதவியோடு கடந்த 10 மாதத்திற்கும் மேலாக புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. 64 அடி உயரம் கொண்ட நுழைவாயில் ராஜகோபுரத்தில் வண்ணம் பூசும் பணி நிறைவு பெற்றுள்ளது. கோயிலில் உள்ள 27 சன்னதிகள், கோபுரங்கள் மற்றும் விமானங்களும் வண்ணம் பூசப்பட்டுள்ளது. உள்பிரகாரத்தில் பரம்பரை கற்கள் பதிப்பும், வெளி பிரகார வளாகத்திற்குள்ளும் கருங்கற்கள் பதிக்கும் பணியும் நடந்து வருகிறது. யாகசாலை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் கற்கள் பதிப்பு பணி நடந்து வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த திராவிட மாடல் திமுக அரசை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். கடந்த 2023 ஏப்ரலில் சித்திரை பெருந்திருவிழா நடத்தப்படவில்லை. எனவே, இந்தாண்டாவது புனரமைப்பு பணிகளை விரைந்து முடித்து, கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். சித்திரை பெருந்திருவிழாவும் நடத்த வேண்டும். தெப்பக்குளத்தை தூர்வாரி முல்லைப்பெரியாற்று நீரை தேக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post சின்னமனூரில் 1,200 ஆண்டு பழமையான கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்: திமுக அரசுக்கு ஆன்மீக அன்பர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kumbabhishekam ,Chinnamanur ,DMK govt ,DMK government ,Theni District ,Markaiyankot ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்