×

பாலம் கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து விபத்து 2 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் பலி: மகாராஷ்டிராவில் பயங்கரம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச் சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமான பணியின் போது ராட்சத இரும்பு கர்டர்கள் விழுந்ததில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த 2 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் பலியாகினர். மும்பை – நாக்பூர் இடையே 701 கி.மீட்டர் தூரத்துக்கு சம்ருதி மகாமார்க் எக்ஸ்பிரஸ் சாலை 3 கட்டங்களாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலை 10 மாவட்டங்கள் வழியாக செல்கிறது. முதல் இரண்டு கட்ட பணிகள் முடிந்து அதில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது. 3ம் கட்டமாக பர்வீர் கிராமத்தில் இருந்து தானேயில் உள்ள வால்பே வரை 100 கி.மீட்டர் தூரத்துக்கு சாலைப்பணி நடந்து வந்தது.

இதில் 9 இன்ஜினியர்கள் உட்பட நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரவு பகலாக இந்த பணி நடந்து வந்தது. இந்த சாலை பணியின் ஒரு பகுதியாக சகாபூர் தாலுகாவில் உள்ள குதாடி சர்லாம்பே கிராமத்தில் பாலம் கட்டப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நள்ளிரவில், பாலத்தில் ராட்சத இரும்பு கர்டர்களுடன் சிலாப் ஒன்றை கிரேன் மூலம் உயரத்தில் தூக்கி வைக்க முயற்சி நடந்தது. இதற்காக ராட்சத இரும்பு கர்டர்களை தூக்கி வைக்கும் கிரேன் பயன்படுத்தப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக இரும்பு கர்டர் மற்றும் சிலாப்புடன் கிரேன் கவிழ்ந்து கீழே வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது.

இது பற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினரும், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியினை மேற்கொண்டனர். இந்த விபத்தில் 15 பேர் உடல் நசுங்கி இறந்தனர். காயம் அடைந்த 5 பேர் கல்வாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் சிலரும் அடுத்தடுத்து இறந்ததால் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர். பலியானவர்கள் பெரும்பாலானோர் ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்கள். இறந்தவர்களின் இரண்டு பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். ஒருவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ்(36). மற்றொருவர் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த கண்ணன். விபத்து குறித்து முதல் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தன் இரங்கலையும் தெரிவித்த அவர், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நஷ்டஈடும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000ம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். விபத்து குறித்து முழு விசாரணைக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அவருடைய அலுவலகம் வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் கூறப்பட்டுள்ளது. விபத்து குறித்த பிரதமர் நரேந்திர மோடி வேதனை தெரித்துள்ளார். இறந்தவர்களில் குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்த பிரதமர் காயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்.

* நாகை இளைஞர் உடலை தமிழ்நாடு கொண்டு வர கோரிக்கை
கிரேன் விபத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த கண்ணன் (23) என்பவரும் பலியானார். இவர் சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரது தந்தை வேதரத்தினம். பெயின்டராக வேலை செய்கிறார். கண்ணனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவ வேண்டும் என்று உறவினர்கள் நாகப்பட்டினம் கலெக்டர் ஜானிடாம் வர்கீசை சந்தித்து மனு அளித்தனர்.

* சென்னைக்கு மாறுதல் கிடைத்த நிலையில் உயிரிழந்த இன்ஜினியர்
கிருஷ்ணகிரி அடுத்த போகனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட விஐபி நகரில் வசிக்கும் இளங்கோவின் மகன் சந்தோஷ்(36). இன்ஜினியர். இவரது மனைவி ரூபி, 5வயதில் ஆத்விக் என்ற மகனும், அனமித்ரா என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக, தனியார் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டுமான பணியில் சந்தோஷூம் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் பணியின்போது, கிரேன் அறுந்து விழுந்ததில் இவரும் பலியானார். இதுகுறித்து சந்தோஷின் குடும்பத்தினர் கூறுகையில், 3 ஆண்டுகளாக மும்பையில் பணியாற்றியவர், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாட்டிற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணியில் சேர இருந்தார். இதற்குள், கிரேன் விபத்தில் உயிரிழந்த தகவலறிந்து வேதனையில் துடித்து விட்டோம். சந்தோஷ் உடலை விரைவாக கொண்டு வர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பாலம் கட்டுமான பணியின்போது கிரேன் விழுந்து விபத்து 2 தமிழர்கள் உட்பட 20 தொழிலாளர்கள் பலி: மகாராஷ்டிராவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Tamils ,Maharashtra ,Mumbai ,Thane, Maharashtra ,
× RELATED மும்பையில் 14 பேர் பலியான சம்பவத்தில்...