×

கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நீச்சல்குளம், ஷவரில் ‘ஜெயமால்யதா’ ஜாலி குளியல்: தங்கியிருக்கும் இடத்தில் குளுகுளு வசதிக்கு ஏற்பாடு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் நகரில் கடந்த சில தினங்களாக அக்னி நட்சத்திர வெயில் கொளுத்துகிறது. இதனால் வெப்பத்தை தணிக்க ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா தினமும் இரண்டு வேளை ஷவரிலும் மற்றும் நீச்சல் குளத்திலும் குளித்து மகிழ்கிறது. அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியவுடன் திருவில்லிபுத்தூர் நகரில் வழக்கத்திற்கு மாறாக அடை மழை பெய்தது. அக்னி நட்சத்திர காலமா என்று யோசிக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக குளிர்ந்த காற்றும் பரவலான மழையும் இருந்து வந்தது.

இந்நிலையில் மழை நின்று குளிர்ந்த சூழல் மாறி வழக்கத்தை போல் வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. காலை 8 மணிக்கு அடிக்க ஆரம்பிக்கும் வெயில் மாலை 6 மணி வரை வாட்டி வதைக்கிறது. பகல் வேளைகளில் வெயிலின் தாக்கத்தால் புழுக்கமான சூழல் நிலவுகிறது. பகலில் வீசுகின்ற காற்று கூட அனல் காற்றாகத்தான் வீசுகிறது. மதிய வேளைகளில் இந்த வெயிலின் தாக்கத்தினால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் மிகவும் குறைவாக காணப்படுகிறது.

பல்வேறு முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. திருவில்லிபுத்தூர் நகரில் கொளுத்தும் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க ஆண்டாள் கோவில் யானை காலையில் ஷவரில் குளித்து மகிழ்கிறது. மாலையில் நீச்சல் குளத்தில் குளித்து மகிழ்கிறது. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க தினமும் இரண்டு வேளை குளியல் போடுகிறது.

இதற்காக ஆண்டாள் கோவில் யானை காலை விஸ்வரூப தரிசனத்திற்கு சென்றுவிட்டு தனது நடை பயணம் முடித்து வந்தவுடன் ஷவரில் உற்சாக குளியல் போடுகிறது. பின்னர் மாலையில் தங்கி இருக்கிற இடத்தில் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நீச்சல் குளத்தில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக குளித்து மகிழ்கிறது. அக்னி நட்சத்திரமான இந்த நேரத்தில் ஒரு நாளைக்கு இரண்டு தடவை குளித்து மகிழ்கிறது. மேலும் வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க யானை தங்கி இருக்கும் இடத்தில் பெரிய அளவிலான மின்விசிறிகள் இயக்கப்படுகின்றன.

The post கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க நீச்சல்குளம், ஷவரில் ‘ஜெயமால்யதா’ ஜாலி குளியல்: தங்கியிருக்கும் இடத்தில் குளுகுளு வசதிக்கு ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Jayamalyatha ,Thiruvillyputtur ,Agni ,Andal ,Dinakaran ,
× RELATED கலசபாக்கம், சேத்துப்பட்டு அருகே அக்னி வசந்த விழாவில் துரியோதனன் படுகளம்