×

கோடை காலத்தில் முதல்முறையாக அடைமழையால் நிரம்பியது வாழைகுளம் கண்மாய்

திருவில்லிபுத்தூர், மே 12: திருவில்லிபுத்தூர் பகுதியில் அக்னி நட்சத்திரம் காலத்திலும் அடைமழை பெய்ததால் வாழைகுளம் கண்மாய் முதன்முதலாக கோடை காலத்தில் நிரம்பியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.பொதுவாக அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும். பகல் வேளைகளில் மக்கள் வெளியே நடமாட முடியாது. வீசுகின்ற காற்று கூட அனல் காற்றாக தான் வீசும். இத்தகைய சூழ்நிலையில் தற்போது பெய்து வருகின்ற அடை மழையின் காரணமாக திருவில்லிபுத்தூர் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்துள்ளது. மேலும் முதன் முதலில் திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் நிரம்பி உள்ளது.

இந்த வாழைகுளம் கண்மாயை பொறுத்தவரை திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்யும் மழை தண்ணீர் முதன்முதலாக வந்து சேரும் இடம் வாழை குளம் கண்மாய் தான். அந்த வகையில் கடந்த சில தினங்களாக திருவில்லிபுத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வாழைகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது. இதனால் முதன்முதலாக வாழை குளம் கண்மாய் நிரம்பி உள்ளது. இன்னும் ஒரு மழை பெய்தால் கண்மாய் மறுகால் பாயும் சூழல் உள்ளது. மம்சாபுரத்தை பொறுத்தவரை விவசாயம் சார்ந்த பகுதி. இந்த சூழ்நிலையில் வாழைகுளம் கண்மாய் நிரம்பியுள்ளது விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்க தலைவர் முத்தையா கூறுகையில், ‘‘இந்த கோடையில் சித்திரை மாதத்தில் மழை பெய்து பல ஆண்டுகளுக்கு பிறகு வாழைகுளம் கண்மாய் நிரம்பியது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் ஒரு சில நாட்கள் மழை பெய்தால் வாழைகுளம் கண்மாய் மறுகால் பாயும். அவ்வாறு மறுகால் பாய்ந்தால் திருவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்டத்திலேயே மிகப்பெரிய கண்மாயான பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் போய் சேரும். எனவே வாழைகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த நீர் மம்சாபுரம் பகுதியில் சுமார் 700 ஏக்கர் அளவில் விவசாயத்திற்கு பயன்படும். நிலத்தடி நீர் மட்டம் உயரும். திருவில்லிபுத்தூர் தாலுகாவை பொறுத்தவரை சுமார் 250க்கும் மேற்பட்ட சிறிதும் பெரிதுமான குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளன. அதில் முதல் குளமாக மம்சாபுரம் வாழைகுளம் கண்மாய் நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.

The post கோடை காலத்தில் முதல்முறையாக அடைமழையால் நிரம்பியது வாழைகுளம் கண்மாய் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில்...