×

திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் விலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்குதொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு பகுதி, சில ஆண்டுகள் முன்பு வரை சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக இருந்து வந்தது. இப்பகுதியில் அரிய வகையை சேர்ந்த சாம்பல் நிற அணில்கள் உள்ளதால் தமிழக அரசு இதனை சாம்பல் நிற அணில்கள் சரணாலயமாக அறிவித்தது. ஆனால் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் நடந்த பல்வேறு கணக்கெடுப்புகளில், புலிகளும் அதிக எண்ணிக்கையில் இருந்தது தெரிய வந்ததால், புலிகளை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசு இந்த பகுதியை திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவித்தது. இது இந்தியாவின் 51வது புலிகள் காப்பகமாகவும், தமிழகத்தின் 5வது புலிகள் காப்பகமாகவும் விளங்கி வருகிறது. கோவிட் பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் இந்த புலிகள் காப்பகம் பகுதிக்கு யாரும் வரவில்லை.

மிகவும் அமைதியாக இருந்த சூழலில் மேற்குதொடர்ச்சி மலை வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், யானைகள், மான்கள். கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குளின் எண்ணிக்கையும் மிகவும் கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையிலும், அவற்றின் எண்ணிக்கையை கண்டறியும் வகையிலும், வனப்பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்டறியும் வகையிலும் பல்வேறு பகுதிகளில் வனத்துறை சார்பில் இரவிலும் துல்லியமாக செயல்படக்கூடிய அதி நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்களில் புலிகள் மட்டுமின்றி, சிறுத்தைகள் ஏராளமான மான்கள், கரடிகள், காட்டெருமைகள், யானைகள், செந்நாய்கள், ராஜ நாகங்கள், பெரிய அளவிலான மலைப்பாம்புகள் என ஏராளமான வன விலங்குகள் பதிவாகியுள்ளன. சிறுத்தைகள் உட்பட வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என இந்த பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்துறையை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வன அதிகாரிகள், நக்சல் தடுப்பு போலீசார் அடிக்கடி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிட் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் வனப்பகுதிகளில் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் இடையூறு ஏதும் இன்றி வன விலங்குகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளன. இதனாலும் வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது’ என்று தெரிவித்தார். இந்த புலிகள் காப்பகத்தில் சிறுத்தைகள் உட்பட மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது வன ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் உள்ள புலிகள் காப்பகத்தில் விலங்குகள் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Thirvilliputtur Chendrakathopa ,Thiruvillyputtur ,Tiruviliputtur ,Thiruviliputtur ,Thirvilliputtur Sendakhatopam ,
× RELATED சதுரகிரி கோயிலுக்கு சென்ற பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கல்