×

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது: நாடாளுமன்றத்தில் ஓயாத அமளி

புதுடெல்லி: அதானி மற்றும் ராகுல் விவகாரத்தில் ஆளும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்றும் முடங்கின. ஓயாத அமளிக்கு இடையே 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்ற 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில், அதானி குழும மோசடி தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகளும், ராகுல் தனது லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்கக் கோரி பாஜ எம்பிக்களும் தொடர் அமளியில் ஈடுபட்டதால் ஒருநாள் கூட அவை முழுமையாக நடக்கவில்லை. இந்நிலையில், நேற்றும் அமளி தொடர்ந்தது. நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே அறையில் திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்றைய தினத்தில் அவையில் வகுக்க வேண்டிய உத்திகள் குறித்து விவாதித்தனர்.

பின்னர் மக்களவை கூடியதும் அதானி விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அமளிக்கு இடையே கடலோர நீர்வாழ் உயிரின ஆணைய திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவையிலும் கடும் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 2ம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. நாடாளுமன்றத்தில் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 31ம் தேதி தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடந்தது. பிப்ரவரி 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2ம் கட்ட பட்ஜெட் தொடர் கடந்த மார்ச் 13ம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

The post பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நிறைவடைகிறது: நாடாளுமன்றத்தில் ஓயாத அமளி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Houses of Parliament ,Adani ,Rahul ,Amali ,Dinakaran ,
× RELATED அவர் பிரதமரில்லீங்க.. ராஜா..டெம்போ...