×

பிப். 1ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில் தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தேர்தல் ‘சலுகை’ அறிவிப்பு..? எதிர்கட்சிகளின் வியூகத்தால் ஒன்றிய அரசுக்கு நெருக்கடி

புதுடெல்லி: வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள ஒன்றிய பட்ஜெட்டில் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 11 ஆண்டுகளாக ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தேர்தல்களை கருத்தில் கொண்டே பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டு வந்துள்ளது. கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையை இழந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைத் தக்கவைத்துள்ளது. இதனால் கடந்த ஜூலை மற்றும் 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டுகளில் பேரவை தேர்தல் நடைபெற்ற பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. வேலைவாய்ப்பின்மை பிரச்னையைக் கையாள்வதற்காக தனியார் துறையில் வேலைவாய்ப்பு சார்ந்த ஊக்கத்தொகை திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில், 2026-27ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். மேற்குவங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மேற்குவங்கம் மற்றும் அசாமில் ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் மீன்வளம் மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாடு, மேற்குவங்கம், கேரளா ஆகிய மாநிலங்கள் எதிர்கட்சி ஆளும் மாநிலங்கள் ஆகும். அசாமில் பாஜக ஆட்சியும், புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சியும் நடக்கிறது. எனவே இந்த 5 மாநில பேரவை தேர்தலை மையப்படுத்தி, ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக ‘விக்சித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்’ என்ற புதிய சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த மாதம் கொண்டு வந்தது. பழைய திட்டத்தில் நிதியை முழுமையாக ஒன்றிய அரசே வழங்கிய நிலையில், புதிய சட்டத்தின்படி மாநில அரசுகள் 40 சதவீத நிதியை வழங்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மாநிலங்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

இந்த புதிய சட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த எம்பி ஒருவர் கூறுகையில், ‘மாநிலங்களின் உரிமைகளைப் பறித்துக்கொண்டு பொறுப்புகளை மட்டும் அவர்கள் மீது சுமத்துகின்றனர். கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க நிதியமைச்சர் என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று தெரிவித்தார். மேலும் மேற்குவங்கத்திற்கு உரிய நிதியை தராவிட்டால் நாடாளுமன்றத்திலும், வீதியிலும் இறங்கி போராடுவோம் என திரிணாமுல் காங்கிரஸ் எச்சரித்துள்ளது.

Tags : Tamil Nadu ,EU ,Union ,NEW DELHI ,Modi ,
× RELATED மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்...