டெல்லி: அஜித் பவார் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக அஜித் பவார் இன்று காலை மும்பையில் இருந்து புனே புறப்பட்டு சென்றார். அப்போது விமானம் தரையிறங்கும்போது பெரும் சப்தம் கேட்டதாகவும் ஓடு பாதையில் இருந்து விலகிச் சென்று வெடித்து சிதறியது. மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் சென்ற சிறிய ரக விமான காலை 8.45 மணிக்கு விபத்தில் சிக்கியது. இதில் அஜித்பவார் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். பாராமதி பகுதியில் விமானி தரையிறக்க முயன்றபோது தனி விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
விமான விபத்தில் அஜித்பவார் உயிரிழந்த நிலையில் விசாரணைக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்த மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; அஜித் பவார் அவர்கள் அடித்தட்டு மக்களுடன் வலுவான தொடர்பைக் கொண்ட ஒரு மக்கள் தலைவராகத் திகழ்ந்தார். மகாராஷ்டிர மக்களின் சேவைக்கு முன்னணியில் நின்று உழைக்கும் ஒருவராக அவர் பரவலாக மதிக்கப்பட்டார்.
நிர்வாக விஷயங்களில் அவர் கொண்டிருந்த புரிதலும், ஏழை எளிய மக்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற அவரது பேரார்வமும் குறிப்பிடத்தக்கவை. அவரது அகால மரணம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
