×

உடலை உறுதியாக்கும் முருங்கை!

நன்றி குங்குமம் டாக்டர்

நாம் உண்ணும் உணவு வகைகளில் மிகவும் அற்புதமான ஆற்றல் நிறைந்தது முருங்கையில் தயாரிக்கப்பட்ட உணவுகளாகும். முருங்கையில் உயிர்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. முருங்கையை வெளிநாடுகளில் அதிசயமரம் என்றும் உயிர் கொடுக்கும் மரம் என்றும் அழைக்கின்றனர். முருங்கையின் புத்துயிரூட்டும் சக்தியை நாம் பயன்படுத்தினால் நமது ஆரோக்கியம் சிறப்பாக அமையும். புத்துணர்வோடு வாழலாம்.

முருங்கை நோயெதிர்ப்புக் குணமுடையது. ஆயிரக்கணக்கான மூலிகைகளில் முதலாவதாக வைக்கத்தக்கது முருங்கையேயாகும்.முருங்கையின் இலை, காய், பூ, பட்டை, வேர், பிசின் என அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்ததாகும்.தமிழரின் சமையலில் முருங்கைக் கீரை, முருங்கைக்காய் ஆகிய இரண்டையும் அடிக்கடி காணமுடியும். இந்த இரண்டுமே சுவையும் மணமும் கொண்டவையாகும். சாம்பாரில் முருங்கை இலை உணவுக்கு ருசியூட்டக் கூடியதாகும்.

முருங்கை காயின் பிஞ்சுகளைச் சமைத்துச் சாப்பிட்டால் வாதம், பித்தம், சளி தீரும். முருங்கைப் பூக்களை சமைத்து சாப்பிட்டு வர ஆண் மலட்டுத் தன்மையை நீக்கும். உடல் பலப்படும். கண்ணுக்குக் குளிர்ச்சியூட்டும். சீதளத்தை முறிப்பதால் சுரம், தொண்டையில் வலி, அடைப்பு நீங்கும்.முருங்கை மரத்தின் வேர்ப்பட்டையைக் கஷாயமிட்டுச் சாப்பிட்டால் வாத வீக்கங்கள் குணமாகும். இதயத்தைப் பலப்படுத்தும். ஆனால் இந்த கஷாயத்தை கர்ப்பினி பெண்கள் அருந்தக் கூடாது. முருங்கை கீரையை அரைத்துச் சாறெடுத்து தயிரில் கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும். வாய்ப்புண்ணும் குணமாகும். ரத்தத்திலுள்ள கொழுப்பைக் குறைக்கும்.

முருங்கை இலையைக் கஷாயமாக்கி தினமும் 2 வேலைகள் குடித்தால் விக்கல், மூச்சுத்திணறல் சரியாகும்.முருங்கை வேர்களை தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து அதன் ஆவியைப் பிடித்தால் மூக்கில் சளி சொட்டுதலை குணப்படுத்தும். ஜலதோஷத்தினால் ஏற்படும் சளி அடைப்பு குணமாகும். முருங்கைப் பட்டையைக் கஷாயமிட்டு எடுத்து தேன் கலந்து குடித்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் ஒழியும்.கட்டிகள் வீங்கி வலிக்கும்போது முருங்கை பட்டையைக் கஷாயமிட்டுக் குடித்துவந்தால், கட்டியினால் ஏற்படும் வலி குறையும். கீரைகளை அரைத்து கட்டியின் மீது பற்றுப் போட கட்டி உடைந்துவிடும். இந்த சமயத்தில் உணவில் முருங்கை காய்களை அதிகம் சேர்த்துக் கொண்டால் கட்டிகள் விரைவில் குணமாகும். முருங்கை மரத்தின் பட்டைக் கஷாயம் குடித்தால் சீழ் கட்டிகள் பழுத்து உடையும்.

கீரைகளை அரைத்துப் பற்றுப்போட, பழுக்காத கட்டிகள் கூட பழுத்து உடைந்து விரைவில் குணமாகும். முருங்கை இலை மற்றும் முருங்கை ஈர்க்குகளுடன் மிளகு சீரகம் சேர்த்து சூப் போன்று செய்து தினசரி காலை வேளையில் குடித்து வர ரத்தத்திலுள்ள சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கும்.முருங்கை மரத்தின் வேர்களை அரைத்துச் சாந்தாக எடுத்து தோலில் பூசி வர தோலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல் குணமாகும். மேலும் தோல் பளபளப்பாகும்.

முருங்கை மரத்தின் வேர்ப் பட்டைகளைக் கஷாயமிட்டு தினமும் மூன்று வேளைகள் குடித்து வர சிறுநீரகக் கற்கள் உடைந்து வெளியேறிவிடும். தினசரி குளிப்பதற்கு முன்பு முருங்கைப்பட்டையை கஷாயமிட்டு அதை தண்ணீருள்ள ஒரு அகலமான டப்பில் ஊற்றி அந்த டப்பில் அரை மணி நேரம் வரை உட்கார்ந்து கொள்ள மூலநோய் உள்ளவர்களுக்கு ரத்தப்போக்கு நிற்கும். மூலமும் குணமாகும்.

அடிக்கடி முருங்கைக் கீரை, பூக்கள், காய்கள் அனைத்தையும் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் நோய்யெதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.

முருங்கையில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகையைத் தடுக்கிறது, ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. கண் பார்வையை தெளிவாக்குகிறது.

இதில் கால்சியம் நிறைந்துள்ளதால் எலும்புகளை பலமாக்கும்.

முருங்கைக்கீரை சமைக்கும் முறைகள்

*முருங்கைக் கீரையை வேகவைத்து சூப்பாக குடிக்கலாம்.

*பொரியல், கூட்டு, ரசம் போன்ற உணவுகளில் சேர்க்கலாம்.

*கீரையை நெய்யில் வதக்கி சாப்பிடலாம்.

*முருங்கை கீரை பொடியை தினசரி ஒரு தேக்கரண்டி உணவில் சேர்க்கலாம்.

நவீன ஆய்வின் முடிவுகள்

*முருங்கை வேர்களையும், பூக்களையும் அரைத்து ஆய்வு செய்தபோது ஈரலைக் காக்கும் குணம் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

*முருங்கை மரப்பட்டையை அரைத்து ஆய்வு செய்தபோது வீக்கம் அமுக்கப்பட்டதன் விளைவுகளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

*முருங்கை விதைகளை அரைத்துச் சாறு எடுத்து ஆய்வு செய்ததில் வீக்கத்தைக் குணப்படுத்துவதாகவும், பிளவைக் கட்டிகளைக் குணப்படுத்துவதாகவும் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

Tags : Murunga ,MULUNGA ,
× RELATED சானிட்டரி நாப்கின் பயன்பாடும் நவீன மாற்றுகளும்!