×

அலங்காநல்லூரில் வெகு விமர்சையாக நடைபெற்ற உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு

அலங்காநல்லூர்: மதுரை அருகே, அலங்காநல்லூரில் இன்று நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். இதில், 1001 காளைகள், 933 வீரர்கள் களமிறங்கி அதகளம் செய்தனர். தைப்பொங்கலையொட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றவை. இதன்படி நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்நிலையில், முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக அலங்காநல்லூரில் இன்று உலகப்புகழ் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி நகரில் உள்ள கோட்டை முனியசாமி கோயில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டது. இதில் பங்கேற்க 6,210 காளைகள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்திருந்த நிலையில், 1,153 காளைகள் மற்றும் 933 மாடுபிடி வீரர்கள் களமிறங்க தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. முன்னதாக இன்று காலை மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. பின்னர் வீரர்கள் உறுதிமொழியேற்றனர். இதை தொடர்ந்து கோட்டை முனியசாமி கோயில் வாடிவாசல் திடலில் வழிபாடு நடைபெற்றது. காலை 7 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், கலெக்டர் பிரவீன்குமார், சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன், மாவட்ட போலீஸ் எஸ்பி அரவிந்த் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர். முதலில் வாடிவாசலில் இருந்து 3 கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.

பின்னர் வாடிவாசலில் இருந்து சுற்றுவாரியாக காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. ‘‘தொட்டுப்பார்’’ என ஆக்ரோஷமாக வெளி வந்த காளைகளை, ‘‘விடுவோமா’’ என வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். ஜல்லிக்கட்டை காண 10 மணி அளவில் அலங்காநல்லூர் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விழாக்கமிட்டி சார்பிலும், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தலைமையிலான திமுகவினர் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பிரத்யேகமாக அமைக்கப்பட்ட மேடையில் முதல்வர் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்வையிட்டார். பின்னர் 10.30 மணியளவில் பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரனார் மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

காலை 7 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 6.15 மணி வரை நடைபெற்றது. சுற்றுக்கு 50 வீரர்கள், 100 காளைகள் களமிறக்கப்பட்டனர். அதிக எண்ணிக்கையில் காளைகளை அடக்கி முதலிடம் பிடித்த வீரர், சிறந்த காளை உரிமையாளருக்கு கார், டிராக்டர், டூவீலர், நாட்டுப் பசுங்கன்று ஆகிய பரிசுகளும், இரண்டாமிடம் பெற்ற வீரர், காளைக்கு பைக் உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட்டன. இது தவிர வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளை உரிமையாளர்களுக்கும் டிவி, பிரிட்ஜ், வாசிங் மெஷின், மிக்சி, கிரைண்டர், கட்டில், மெத்தை, சைக்கிள், தங்கம், வெள்ளிக் காசுகள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன. மைதானத்தில் ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினர், கால்நடை மருத்துவ ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர். காயமடைந்த வீரர்களுக்கும், காளைகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டன.

பார்வையாளருக்கு கூடுதல் கேலரி:
இந்தாண்டு அலங்காநல்லூரில் பார்வையாளர்கள் அமர கூடுதல் கேலரி அமைக்கப்பட்டிருந்தது. உள்ளூர் மக்கள் பார்வையிட தனியாக மேடையும், வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தனி மேடையும் அமைக்கப்பட்டிருந்தது.

3450 போலீசார் பாதுகாப்பு
முதல்வர் வருகையையொட்டி தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிடாரி தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் 3,450க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9 மணியளவில் மதுரை வந்தார். அவருக்கு விமானநிலையத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர், அமைச்சர் பி.மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மு.மணிமாறன், மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, சோழவந்தான் எம்.எல்.ஏ மற்றும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை தொடர்ந்து கார் மூலம் அலங்காநல்லூருக்கு காலை 10 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். வழியில் அய்யர் பங்களா, ஊமச்சிகுளம், அச்சம்பட்டி, பண்ணைக்குடி, கேட்டுக்கடை பகுதிகளில் 15 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் திமுக கொடிகள் கட்டப்பட்டு கிராமிய கலை நிகழ்ச்சிகள், மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் பூரண கும்பமரியாதை மற்றும் மலர் தூவி பொதுமக்கள் மற்றும் திமுகவினர் வரவேற்பு அளித்தனர். மேலும், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் திமுகவின் அணி அமைப்பாளர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். ஜல்லிக்கட்டு மைதானத்துக்கு சென்ற முதல்வருக்கு விழாக்கமிட்டி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வரை பார்த்த பார்வையாளர்களும் உற்சாக கரகோஷம் செய்தனர்.

48 பேர் காயம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 9வது சுற்று முடிவில் தக்கலை காவலர், மதுரை பெரியார் பஸ்நிலைய தீயணைப்பு வீரர் ராஜேந்திரன் உள்ளிட்ட 48 பேர் காயமடைந்தனர். இதில், 19 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : World Famous Jallikatu Competition ,Alanganallur ,Jallikatta ,Madurai ,K. Stalin ,Thaipongalaioti ,Avanyapuram, Palamedu, Alanganallur ,
× RELATED தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே...