டெல்லி: ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தெருநாய் கடி தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக தெருநாய்கள் தொடர்பான விதிமுறைகள் செயல்படுத்தப்படாதது குறித்து கவலை தெரிவித்த உச்ச நீதிமன்றம், ’நாய்க் கடி சம்பவங்களுக்கு மாநிலங்கள் பெரும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கேட்கப் போவதாக கூறியது.
நாய்க்கடி சம்பவங்களுக்கு நாய்ப் பிரியர்களும், அவற்றுக்கு உணவளிப்பவர்களும்கூட பொறுப்பாக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் ஆவார்கள் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், ’கடந்த ஐந்து ஆண்டுகளாக விதிமுறைகளைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் எதுவும் செய்யாததால், ஒவ்வொரு நாய்க்கடி மூலம், குழந்தைகள் அல்லது முதியவர்களுக்கு ஏற்படும் மரணம் அல்லது காயங்களுக்கு, மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என்று கேட்கப் போவதாக தெரிவித்த நீதிபதிகள், ’விலங்குகளை (நாய்கள்) நீங்கள் இவ்வளவு நேசித்தால், ஏன் அவற்றை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்லக்கூடாது? இந்த நாய்கள் ஏன் சுற்றித் திரிந்து, மக்களைக் கடித்து, பயமுறுத்த வேண்டும்’ என்று நீதிபதி நாத் கேள்வி எழுப்பினார்.
அப்போது நீதிபதி மேத்தா, நீதிபதி நாத்தின் கருத்துகளுடன் உடன்பட்டு, ’ஒன்பது வயது குழந்தையை நாய்கள் தாக்கும்போது யார் பொறுப்பாக்கப்பட வேண்டும்? அவற்றுக்கு உணவளிக்கும் அமைப்பா? இந்தச் சிக்கலுக்கு நாங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா’ என்று கூறினார். இதனையடுத்து இன்றைய வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கு விசாரணையை ஜனவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்.

