சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று காலை பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் சந்தித்து பேசினர். அப்போது விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, புதிதாக 1.82 லட்சம் மின் இணைப்புகள், பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் 37 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 6,049 கோடி இழப்பீடு; பருவமழை காலங்களில் இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 33.84 லட்சம் ஏக்கரில் ஏற்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர் சேதத்திற்கு ரூ.1,924 கோடியில் 25 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணம் போன்ற பல்வேறு திட்டங்களை வேளாண் பெருமக்களின் நல்வாழ்விற்காக சீரிய முறையில் செயல்படுத்திவரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, பல்வேறு விவசாய அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நன்றியினையும், பொங்கல் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின், விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தன்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
இச்சந்திப்பில், தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் தலைவர் வெ. தனபாலன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் மு.சேரன், தென்னிந்திய நதிகள் இயக்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு, விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் எம்.வெங்கடேசன், காணி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் பிரகாஷ், முப்பெரும் உழவர் பெருந்தலைவர் விவசாயிகள் சங்க தலைவர் கே.எம்.வெங்கடேசன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் இராஜேந்திரன், நந்தன் கால்வாய் இணைப்பு சங்க நிர்வாகி அறவாழி, தமிழ்நாடு நதிகள் பாதுகாப்பு இயக்க நிர்வாகி ஆனந்தன் உள்பட பல்வேறு விவசாய சங்க தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வின்போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் எழிலன், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் வ.தட்சிணாமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
