புதுடெல்லி: டெல்லியில் இந்திய ராணுவ தளபதி உபேந்திர திவேதி அளித்த பேட்டியில், ‘உலகளவில் கடந்த காலங்களில் ஆயுத மோதல்கள் அதிகரித்து வந்த நிலையில், நமது நாடு எதற்கும் தயாராக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேற்கு எல்லை மற்றும் ஜம்மு காஷ்மீரில் நிலைமை தற்போது கட்டுக்குள் இருக்கிறது. 2025ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் உட்பட 31 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரையில் நான்கு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டது அங்கு அமைதி திரும்புவதை உறுதி செய்கிறது. வடக்கு எல்லையில் சீனாவுடனான பதற்றம் தணிந்து ஆடு மேய்த்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தாலும், ராணுவத்தினர் தொடர்ந்து விழிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வடகிழக்கு மாநிலங்களில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்கும் வகையில் மியான்மர் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூரில் 2025ம் ஆண்டில் பாதுகாப்பு படையினரின் நடவடிக்கையால் நிலைமை சீராகி, குகி கிளர்ச்சியாளர்களுடனான சண்டை நிறுத்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இயற்கை பேரிடர் காலங்களில் 30,000 பேரை ராணுவத்தினர் பத்திரமாக மீட்டுள்ளனர். எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஒடுக்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். வருங்காலங்களில் யாரேனும் அத்துமீறினால் அவர்களுக்கு உடனடியாக தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
