×

2026ஐ வெற்றியுடன் தொடங்கிய இந்தியா; கோஹ்லி ஆட்டத்தால் கேப்டனாக எனது பணி எளிதாகி விடுகிறது: சுப்மன் கில் பேட்டி

வதோதரா: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒன்டே, 5 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் ஒருநாள் தொடரின் முதல் போட்டி வதோதராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன் எடுத்தது. அதிகபட்சமாக டேரில் மிட்செல் 84, ஹென்றி நிக்கோலஸ் 62, கான்வே 56 ரன் அடித்தனர். இந்திய பவுலிங்கில் சிராஜ், ரானா, பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித்சர்மா 26 ரன்னில் வெளியேற கேப்டன் சுப்மன் கில் 56, விராட்கோஹ்லி 93, ஸ்ரேயாஸ் அய்யர் 49 ரன் அடித்தனர். ஹர்சித் ரானா 23 பந்தில் 29, கே.எல்.ராகுல் நாட் அவுட்டாக 21 பந்தில் 29 ரன் எடுத்தனர். 49 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 306 ரன் எடுத்த இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. விராட் கோஹ்லி ஆட்டநாயகன் விருது பெற்றார்.2026ம் ஆண்டை வெற்றியுடன் தொடங்கி இந்திய அணி கேப்டன் கில் கூறியதாவது:

இதுபோன்ற ஒரு சேசிங்கில் நானும் சிறிது பங்களிப்பு அளித்து இருக்கிறேன் என நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வீரராக எப்போதுமே நிகழ்காலத்தில் இருப்பதையே விரும்புகிறேன். நம் முன் என்ன இருக்கிறதோ, அதில் மட்டும்தான் நாம் கவனம் செலுத்தவேண்டும். கோஹ்லி ஆடும் விதத்தால் ஒரு கேப்டனாக எனது பணி எளிதாகி விடுகிறது. இதுபோன்ற ஆடுகளத்தில் கூட இன்னிங்சை கட்டமைப்பது என்பது ஆரம்பத்தில் கொஞ்சம் சவாலாக இருக்கிறது. ஆனால் கோஹ்லி அனைத்தையும் எளிதாக மாற்றிவிடுகிறார். கடந்த தொடரில் அர்ஷ்தீப்சிங் நன்றாக செயல்பட்டார். தற்போது சிராஜ் இருக்கிறார். உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைக்க முயற்சி செய்கிறோம். வாஷிங்டன் சுந்தருக்கு காயம் குறித்து ஸ்கேன் பரிசோதனை செய்ய உள்ளோம். அதன் முடிவை பொறுத்து இந்த தொடரில் விளையாடுவாரா இல்லையா என்பது தெரிய வரும்.இவ்வாறு அவர் கூறினார்.2வது போட்டி ராஜ்கோட்டில் நாளை மறுநாள் நடக்கிறது.

கடவுள் எனக்கு அளவுக்கு மீறி கொடுத்திருக்கிறார்!
ஆட்டநாயகன் விருது பெற்ற கோஹ்லி கூறுகையில், “இந்த விருதை எல்லாம் எனது அம்மாவுக்கு அனுப்பி விடுவேன். அவர் பத்திரமாக அறையில் வைத்திருப்பார். இதை பார்த்து பெருமைப்படுவார். எனது திறமை என்னவென்று எனக்கு தெரியும். சில விஷயத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறேன். இதனால் தான் தற்போது நான் இந்த இடத்தில் இருக்கிறேன். கடவுள் எனக்கு அளவுக்கு மீறி கொடுத்திருக்கிறார். அதற்கு நான் நன்றியோடு இருக்கிறேன். நான் எந்த ஒரு மைல் கல்லையும் நினைத்து விளையாடுவதில்லை. களமிறங்கும் போது அணி நெருக்கடியான சூழலில் இருந்தால் ஆக்ரோஷமான ஷாட்கள் இல்லாமல் கவுன்டர் அட்டாக் செய்ய வேண்டும். எனக்கு முன்பாக பேட் செய்யக்கூடிய வீரர் அவுட்டாகும்போது, நான் உள்ளே வருவதற்காக ரசிகர்கள் கத்துவதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இதேபோல டோனிக்கு நடந்திருக்கிறது. ரசிகர்கள் உற்சாகப்படுத்துவதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனாலும் நான் எனது விஷயத்தில் கவனமாக இருப்பேன். மக்கள் வந்து என்னை பார்ப்பதே ஒரு ஆசீர்வாதம்தான். அதற்கு நான் நன்றி உள்ளவனாக இருக்கிறேன். சந்தோசமான முகங்களை பார்க்கும்போது எனக்கும் சந்தோசமாக இருக்கும்’’ என்றார்.

பிட்ஸ்… பிட்ஸ்…
* ஒருநாள் போட்டிகளில் கோஹ்லி 45வது முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார். சச்சின் 62, ஜெயசூர்யா 48 என முதல் 2 இடத்தில் உள்ளனர்.
* ஒரு நாள் போட்டியில் 300 பிளஸ் ரன் சேசிங் வெற்றியில் கோஹ்லி 12 போட்டியில் 1091 ரன் விளாசி உள்ளார். சராசரி 121.22. இதில் 7 சதம், 2 அரைசதம் அடங்கும்.
* 300 பிளஸ் ரன் சேசிங்கில் இந்தியா 20 முறை வென்றுள்ளது. இங்கிலாந்து 15, ஆஸ்திரேலியா 14, பாகிஸ்தான் 12, நியூசிலாந்து மற்றும் இலங்கை 11 போட்டியில் வென்றுள்ளன.
* நியூசிலாந்துக்கு எதிராக நேற்று இந்தியாவின் 2வது வெற்றிகரமான சேசிங் இலக்காகும். இதற்கு முன் 2010ல் பெங்களூருவில் 316 ரன்னை சேசிங் செய்திருந்தது.
* 2025 சாம்பியன் டிராபிக்கு பின் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 9ல் வென்றிருந்த நியூசிலாந்து நேற்று தோல்வி அடைந்தது.
* 2023ம் ஆண்டுக்கு பின் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக ஒருநாள் போட்டியில் 8வது வெற்றியை பெற்றுள்ளது.

Tags : India ,Kohli ,Shubman Gill ,Vadodara ,New Zealand ,ODI ,
× RELATED சில்லிபாயிண்ட்…