அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழாவை பிரதமர் மோடியும் ஜெர்மன் வேந்தரும் இணைந்து தொடங்கி வைத்தனர். இந்தியா மற்றும் ஜெர்மனி இடையிலான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஜெர்மன் நாட்டின் வேந்தராகப் பொறுப்பேற்றுள்ள பிரெட்ரிக் மெர்ஸ் முதன்முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றுப் படுகையில் நடைபெற்ற விழாவிற்கு வருவதற்கு முன்பாக, இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் இருவரும் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் சந்தித்தபோது, நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டுவது மற்றும் விசா நடைமுறைகளை எளிதாக்குவது உள்ளிட்ட வர்த்தக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றுப் படுகையில் 2026ம் ஆண்டுக்கான சர்வதேச பட்டம் விடும் விழாவை பிரதமர் மோடியும், ஜெர்மன் வேந்தர் பிரெட்ரிக் மெர்ஸும் இன்று கோலாகலமாகத் தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் 50 நாடுகளைச் சேர்ந்த 135 சர்வதேச பட்டம் விடும் கலைஞர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான உள்ளூர் கலைஞர்கள் கலந்துகொண்டு பல வண்ண பட்டங்களை வானில் பறக்கவிட்டனர். விழாவின் ஒரு பகுதியாக இரு தலைவர்களும் இணைந்து உற்சாகமாகப் பட்டங்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். வரும் 14ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழா, மகர சங்கராந்தி கொண்டாட்டங்களின் தொடக்கமாக அமைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
