×

அனைத்தும் எங்க கட்டுப்பாட்டில் வந்துவிட்டது… இனிமே.. வெனிசுலாவிடம் பேசத் தேவையில்லை: எண்ணெய் நிறுவனங்களுக்கு டிரம்ப் போட்ட உத்தரவு

 

வாஷிங்டன்: வெனிசுலா அதிபர் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், எண்ணெய் நிறுவனங்களை உடனடியாக முதலீடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் சமீபத்தில் கைது செய்தன. இதைத்தொடர்ந்து அந்நாட்டின் நிர்வாகம் மற்றும் எண்ணெய் வளங்கள் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப், ‘நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்காவிட்டால், ரஷ்யா அல்லது சீனா இந்த வளங்களைக் கைப்பற்றியிருக்கும். தற்போது அனைத்தும் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது; பாதுகாப்புக்காகப் பிரம்மாண்டமான கடற்படை நிறுத்தப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் செவ்ரான், எக்ஸான் மொபில் உள்ளிட்ட நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய டிரம்ப், ‘இனிமேல் நீங்கள் வெனிசுலா நிர்வாகத்திடம் பேசத் தேவையில்லை; நேரடியாக எங்களுடன்தான் பேச வேண்டும். சிதிலமடைந்துள்ள கட்டமைப்பைச் சீரமைக்க 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய வேண்டும்’ என்று கறாராகத் தெரிவித்தார்.

மேலும், எண்ணெய் விற்பனைப் பணம் முதலில் அமெரிக்க வங்கிக் கணக்கிற்கு வரும் என்றும், அங்கிருந்துதான் மற்றவர்களுக்குப் பிரித்துத் தரப்படும் என்றும் கூறிய அவர், அமெரிக்காவிற்குத் தொடர்ந்து 50 மில்லியன் பீப்பாய் எண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். இதற்குப் பதிலளித்த எக்ஸான் மொபில் நிறுவனத் தலைவர், ‘தற்போதைய சூழலில் அங்கு முதலீடு செய்வது சாத்தியமற்றது’ என்று தயக்கம் காட்டினார். முந்தைய இழப்புகளைச் சுட்டிக்காட்டியபோது, அதை டிரம்ப் நகைச்சுவையாகக் கடந்து சென்றது தொழிலதிபர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – பாக். போரை தடுத்து ஒரு கோடி உயிர்களை காப்பாற்றினேன்
கடந்த 2025ம் ஆண்டு மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கடும் போர் மூளும் சூழல் ஏற்பட்டது. அப்போது அணு ஆயுதப் பயன்பாடு வரை செல்ல இருந்த இந்த மோதலைத் தானே தலையிட்டுத் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆதரவு தெரிவித்திருந்தாலும், இந்தியா தரப்பில், ‘மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தம் ஏற்பட்டது; காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்களில் மூன்றாம் நாட்டின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது’ என்று திட்டவட்டமாக மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிரம்ப், ‘இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெறவிருந்த அணு ஆயுதப் போரை நான் தடுத்து நிறுத்தினேன். இதன் மூலம் குறைந்தபட்சம் ஒரு கோடி உயிர்களைக் காப்பாற்றினேன். இதற்காகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எனக்குப் பொதுவெளியில் நன்றி தெரிவித்துள்ளார்’ என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். தான் இதுவரை 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும், இதற்காகத் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளது சர்வதேச அரங்கில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Tags : Venezuela ,Trump ,Washington ,President Maduro ,President ,United States ,US ,Nicolas Maduro ,
× RELATED பழைய ஓய்வூதிய திட்டம் ஜனவரி 1 முதல்...