சென்னை: கடனை திரும்ப செலுத்தாததால் கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வா வாத்தியார் திரைப்படத்தின் உரிமைகளை ஏலத்தில் விட சொத்தாட்சியருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் ஏற்கனவே போதுமான கால அவகாசத்தை அளித்துவிட்டது என தெரிவித்து தடையை நீக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். வா வாத்தியார் திரைப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. வா வாத்தியார் திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி ஞானவேல் ராஜா தாக்கல் செய்திருந்தார். படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க அர்ஜுன் லால் சொத்துக்களை நிர்வகிக்கும் சொத்தாட்சியர் மனு தாக்கல் செய்துள்ளார். திவாலானவர் என அறிவிக்கப்பட்ட அர்ஜுன் லால் சுந்தர் தாஸிடம் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் ரூ.10.35 கோடி கடன் பெற்றுள்ளது. வட்டியுடன் சேர்த்து ரூ.21.78 கோடி கடனை செலுத்தும் வரை வா வாத்தியார் படத்துக்கு தடை விதிக்க சொத்தாட்சியர் மனு தாக்கல் செய்துள்ளார். சொத்தாட்சியர் மனுவை விசாரித்திருந்த ஐகோர்ட், படத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டதை எதிர்த்து ஞானவேல் ராஜாவும் மனு தாக்கல் செய்துள்ளார்.
