×

சென்னை வடபழனி – பூவிருந்தவல்லி இடையே ஜனவரி 15ம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டம்

 

சென்னை: சென்னை வடபழனி – பூவிருந்தவல்லி இடையே ஜனவரி 15ம் தேதி மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. வடபழனி – பூவிருந்தவல்லி வழித்தடத்தில் 57 கிரேன்கள் மெட்ரோ ரயில் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வடபழனி – பூவிருந்தவல்லி மெட்ரோ வழித்தடமானது டபுள் டெக்கர் வடிவில் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னையில் மக்கள் நெருக்கடி அதிகரித்துவிட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய நகரமாக ஒரு கோடி பேருக்கும் அதிமான மக்கள்தொகை உடன் நாளுக்கு நாள் நெருக்கடியை சந்தித்து கொண்டிருக்கிறது. அதேசமயம் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், வர்த்தகம் போன்ற விஷயங்களால் சென்னையை விட்டு நகர முடியாத நிலையில் பலரும் இருக்கின்றனர். இப்படியான சூழலில் உள்கட்டமைப்பு வசதிகளை படிப்படியாக மேம்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

அந்த வகையில் மெட்ரோ ரயில் திட்டம் ஒரு வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது. தற்போது விம்கோ நகர் பணிமனை முதல் சென்னை விமான நிலையம் வரையிலான ப்ளூ லைன், சென்னை சென்ட்ரல் முதல் செயிண்ட் தாமஸ் மவுண்ட் வரையிலான கிரீன் லைன் என இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரையிலான பர்பிள் லைன், பூந்தமல்லி பைபாஸ் முதல் கலங்கரை விளக்கம் வரையிலான ஆரஞ்சு லைன், மாதவரம் – சோழிங்கநல்லூர் வரையிலான ரெட் லைன் ஆகிய மூன்று வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன

இதில் ஆரஞ்சு லைன் வழித்தடத்தில் வடபழனி முதல் பூந்தமல்லி இடையிலான ஒருபகுதி மெட்ரோ ரயில் சேவையை விரைவாக தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஆற்காடு ரோட்டை ஒட்டி செல்கிறது. இந்த வழித்தடத்தில் ஜனவரி மாதத்தின் மத்தியில், அதாவது 15ஆம் தேதி வாக்கில் சோதனை ஓட்டம் தொடங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் எம்.ஏ.சித்திக் தெரிவித்துள்ளார். இதையொட்டி இரவு, பகல் பாராமல் 4,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

உயர்மட்ட ஸ்லாப்கள் அமைக்கும் பணியில் 3,000 பேர், தண்டவாளம் அமைக்கும் பணியில் 600 பேர், சிக்னலிங் பணியில் 400 பேர் என பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் 7 குழுக்களாக பிரிந்து வேலை செய்து வருகின்றனர். இந்த மெட்ரோ வழித்தடத்தில் பயன்படுத்தப்படும் கிரேன்களின் எண்ணிக்கை 57. வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ வழித்தடமானது டபுள் டெக்கர் வடிவில் செயல்படுத்தப்படவுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் சென்னையின் முதல் டபுள் டெக்கர் மெட்ரோ ரூட் என்ற பெருமையை பெறும்.

 

Tags : Metro Rail ,Chennai ,Vadpalani ,Boomrundavalli ,Vadpalani-Boomrunthavalli road ,Poorundavalli ,Metro ,
× RELATED சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி...