×

திட்டமிட்ட சிறப்பான முன்னெச்சரிக்கையால் சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு கொண்டாட்டம்: ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு

* அதிரடி வாகன சோதனையால் பைக் ரேஸ் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டது

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு சென்னை பெருநகர காவல்துறை எடுத்த சிறப்பான அதிரடி நடவடிக்கையால் விபத்தில்லா புத்தாண்டை வெற்றிகரமாக பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். மழையையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றிய போலீசார் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அருண் திட்டமிட்டு முன்னேற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தார். மேலும், விபத்தில்லா புத்தாண்டு என்ற முழக்கத்துடன் இந்த ஆண்டு புத்தாண்டை சென்னை பெருநகர காவல்துறை முன்னெடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பே விப்ததுக்கள் நடக்கும் இடங்களை அடையாளம் கண்டு அப்பகுதியில் முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சென்னை முழுவதும் போலீஸ் கமிஷனர் அருண் நேரடி கண்காணிப்பில் கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், பிரவேஷ்குமார், போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையில் 4 இணை கமிஷனர்கள், 16 துணை கமிஷனர்கள் என 19 ஆயிரம் போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படை வீரர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் கொட்டும் மழையில் விடியவிடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கொண்டாடத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட மெரினா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை 6 மணி முதலே பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் குவிந்தனர். பிறகு படிப்படியாக இரவு 12 மணிக்குள் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடினர். பின்னர் இரவு 12 மணி ஆனதும், காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் அமைந்துள்ள மணிக்கூண்டு, காந்தி சிலை அருகே பொதுமக்கள் கேக்குகள் வெட்டி ‘2026’ புத்தாண்டை ‘ஹாப்பி நியூ இயர்’ என விண்ணை முட்டும் வகையில் கோஷம் எழுப்பி வெகு விமர்சையாக வரவேற்றனர்.

அப்போது நண்பர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களுக்கு பலர் கேக் வெட்டி பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில் சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. வழிபாட்டிற்கு வந்த பொதுமக்கள் எந்த சிரமங்களும் இன்றி வந்து செல்லும் வகையில் 30 சிறப்பு குழுக்கள் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டன.

இதனால் மக்கள் தடையின்றி கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு வந்து வழிபாடு செய்துவிட்டு வீட்டிற்கு மகிழ்ச்சியாக சென்றனர். புத்தாண்டு பிறந்த 12 மணிக்கு பிறகு வாலிபர்கள் பலர் தங்களது பைக் மற்றும் கார்களில் ‘ஹாப்பி நியூ இயர்’ என முழக்கம் எழுப்பியபடி சென்றனர். அவர்களை பொதுமக்களுக்கு இடையூறு செய்யாதபடி போலீசார் ஆங்காங்கே வழிமறித்து எச்சரித்தும் அறிவுரை கூறியும் கலைந்து போகச் செய்தனர். இதனால் சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பைக் ரேஸ் முற்றிலும் தடுக்கப்பட்டது.

மேலும் சென்னை முழுவதும் 425 இடங்களில் சிறப்பு வாகன சோதனையில் போலீசார் இரவு 12 மணி முதல் அதிகாலை வரை ஈடுபட்டனர். இதனால் குற்றச்சம்பவங்கள் மற்றும் பைக் ரேஸ் உள்ளிட்ட வாகன சாகசங்கள் தடுக்கப்பட்டது. சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தனது மனைவியுடன் இணைந்து மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முன்பு பெருநகர காவல்துறை சார்பில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அமைக்கப்பட்ட முகாமில் குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பணி மேற்கொண்ட போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினார்.

கூடுதல் கமிஷன் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர். விபத்தில்லா புத்தாண்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை முழுவதும் பாதுகாப்பு பணி மேற்கொண்ட 19 ஆயிரம் போலீசார் மற்றும் 1500 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்துள்ளார்.  காவல்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததற்காக பொதுமக்களுக்கும் போலீஸ் கமிஷனர் அருண் பாராட்டு தெரிவித்தார்.

Tags : Commissioner ,Arun ,New Year ,Chennai ,Chennai Metropolitan Police ,English New Year ,
× RELATED கச்சதீவு அருகே மீன்பிடித்துக்...