×

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய அறிக்கை குறித்து ஆராய ஜன.6ம் தேதி அமைச்சரவைக் கூட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் வருகிற 6ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் வருகிற ஜனவரி 20ம் தேதி காலை 9.30 மணிக்கு கூடுகிறது.

2026ம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். கவர்னர் உரை தயாரிக்கும் பணியில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. 2026ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் கவர்னர் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 6ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடர், கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் மற்றும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பாக ககன்தீப் சிங் பேடி குழு முதல்வரிடம் நேற்று முன்தினம் அளித்த இறுதி அறிக்கை குறித்தும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் முக்கிய முடிவு எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

3 அமைச்சர்கள் குழு முக்கிய ஆலோசனை: பழைய ஓய்வூதிய திட்டம் அறிக்கை தொடர்பாக தமிழக அமைச்சர்கள் குழு நேற்று முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். மேலும் ஓய்வூதியம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவ வசதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இருந்தாலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காத்திருப்பு போராட்டங்களையும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் அவ்வபோது நடத்தி வருகிறது.

இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு, மாநில அரசின் நிதிநிலையும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு நடைமுறைக்கு ஏற்ற திட்டத்தை பரிந்துரைக்கவும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு சிறப்பு குழு 9 மாதங்களாக ஆய்வு மேற்கொண்டது.

மேலும் அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்திய அந்த குழு, எல்ஐசி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி, திட்டங்கள் தொடர்பான இறுதி அறிக்கையை நேற்று முன்தினம் (டிச.30) முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமர்ப்பித்தனர். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று இறுதி அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகள் குறித்து அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் எது அரசு மற்றும் அரசு ஊழியர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது குறித்து அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் வரும் ஜனவரி 6ம் தேதி நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Tamil ,Nadu ,Chennai Secretariat ,
× RELATED ரயில் நிலைய விதிமீறல்: ரூ. 2 கோடி அபராதமாக வசூலிப்பு!