×

புத்தாண்டை முன்னிட்டு விஆர் குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்

பாடாலூர், டிச.31: பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அகரம்சீகூர் அருகே உள்ள வசிஷ்டபுரத்தில் விஆர் குழுமத்தின் சார்பில் 4-ம் ஆண்டு பொதுமக்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது.  விஆர் குழுமத்தின் தலைவர் பொன்முடி தலைமை வகித்தார். குழும இயக்குநர் வெங்கடேசன், ரவீனா ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

மருத்துவர்கள் ஜெயபிரபா முருகன், ஜெயம்கொண்டம் சோழவேந்தன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பொது மருத்துவம், இருதய பரிசோதனை, சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த கொதிப்பு நோய் கண்டறிதல், கண் பார்வை பரிசோதனை உள்ளிட்ட நோய்களுக்கான பரிசோதனை செய்து உரிய ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டது.

இம்முகாமில் அகரம்சீகூர், வயலப்பாடி, வேள்விமங்கலம், வசிஸ்டபுரம், கடலூர் மாவட்டம் திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர். முகாமிற்கு வந்திருந்த அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு 2026-ம் ஆண்டுக்கான நாட்காட்டிகள் வழங்கப்பட்டது. மருத்துவ மனை ஊழியர்கள், விஆர் குழும பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : VR Group ,New Year's Eve ,Batalur ,Vashidapura ,Kunnam Taluga Akaramseghur, Perambalur District ,Ponmudi ,
× RELATED கல்பாடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு...