×

கால்பந்து வீரர் மெஸ்ஸியை சந்தித்த விவகாரம்; நடிகைக்கு ஆபாச மிரட்டல் விடுத்த பீகார் வாலிபர் கைது: மேற்குவங்க போலீஸ் அதிரடி

கொல்கத்தா: பிரபல நடிகையைச் சமூக வலைதளங்களில் ஆபாசமாகத் திட்டிய வாலிபரை போலீசார் பீகாரில் அதிரடியாகக் கைது செய்தனர். உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி கடந்த 13ம் தேதி மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு வருகை தந்தார். அப்போது சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு குளறுபடியால் பல ரசிகர்களால் மெஸ்ஸியைப் பார்க்க முடியவில்லை. ஆனால், பிரபல வங்காள நடிகையும், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ் சக்கரவர்த்தியின் மனைவியுமான சுப கங்குலி, மெஸ்ஸியை நேரில் சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், தங்களால் பார்க்க முடியாத நிலையில் நடிகைக்கு மட்டும் ‘விஐபி சலுகை’ கிடைப்பதா எனக் கேள்வி எழுப்பி நடிகை மற்றும் அவரது குழந்தைகளை ஆபாசமாகத் திட்டியும், கொலை மிரட்டல் விடுத்தும் கருத்துகளைப் பதிவிட்டனர். இதுதொடர்பாக நடிகையின் கணவர் கடந்த 14ம் தேதி திட்டாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், ‘எனது மனைவி மற்றும் குழந்தைகளைப் பற்றித் தொடர்ந்து அவதூறான கருத்துகள் பரப்பப்படுகின்றன, இது அரசியல் உள்நோக்கம் கொண்டது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

சைபர் கிரைம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், பீகாரைச் சேர்ந்த பிட்டு வஸ்தவா என்ற வாலிபர் இந்த ஆபாசப் பதிவுகளை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து பீகார் மாநிலம் ஆரா பகுதிக்கு விரைந்த கொல்கத்தா தனிப்படை போலீசார், அந்த வாலிபரைக் கைது செய்தனர். பின்னர் அவரைக் கொல்கத்தா அழைத்து வந்து பாராக்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags : Messi ,Bihar ,KOLKATA ,World Cup ,Lionel Messi ,Kolkata, West Bengal ,
× RELATED காபி தோட்டத்திற்கு வரவழைத்து...