×

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருச்சி,: வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரங்காதார் கோயிலில் நேற்று மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் காட்சி அளித்தார். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (30ம்தேதி) அதிகாலை சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த டிசம்பர் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல் பத்து 10ம் திருநாளான நேற்று நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரம் நடைபெற்றது. பாற்கடலை கடைந்து கிடைத்த அமுதத்தை அசுரர்கள் பறித்து கொள்ள, தேவர்கள் திருமாலை சரணடைந்தனர்.

அவரும் மோகினியாகத் தோன்றி, தேவர்களுக்கு அமுதம் கிடைக்க செய்தார். இதை நினைவூட்டும் வகையில் இந்த மோகினி அலங்கார காட்சி நடைபெற்றது. இதற்காக காலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், 7 மணிக்கு அர்ச்சுன மண்டபம் வந்தார். அங்கு மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். நம்பெருமாளின் மோகினி அலங்காரம் கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. வருடம் ஒருமுறை மட்டுமே சேவை தரும் நாச்சியார் கோலத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

நேற்று மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், இரவு 7 மணிக்கு கருட மண்டபம் சென்றடைந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இதன் தொடர்ச்சியாக ராப்பத்து திருவாய்மொழி திருநாள் இன்று (30ம்தேதி) முதல் தொடங்குகிறது.

இந்நிலையில் இன்று (30ம்தேதி) அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து சிம்ம கதியில் புறப்பட்டு வெளியில் வந்தார். 2ம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே 3ம் பிரகாரத்திற்கு வரும் நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். காலை 5.45 மணியளவில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. அப்போது நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ பரமபதவாசல் வழியாக வெளியே வந்த பக்தர்கள் காட்சியளித்தார்.

அப்போது, பக்தர்கள் ‘ரங்கா ரங்கா’ கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். பின்னர் நம்பெருமாள் மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு வருவார். அங்கு பெருமாள் சுமார் 1 மணி நேரம் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

Tags : Paradise Gate ,Trinchi Srirangam Ranganathar Temple ,Vaikunda Ekadashi ceremony ,Tiruchi ,Namerumal ,Srirangam Rangadar Temple ,Mokini ,Puloka Vaikundam ,
× RELATED ரேஷன் அட்டைக்காக...