×

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உகந்தது அல்ல மதவாத சக்திகள் வளர்ந்து விடக்கூடாது: துரை வைகோ எம்.பி. பேட்டி

நாகர்கோவில்: ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி உகந்தது அல்ல’ என துரை வைகோ எம்.பி. கூறினார். நாகர்கோவிலில் நேற்று காலை துரை வைகோ எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வலுவான நிலையில் போட்டியிட்டு வெற்றி பெறும். மதிமுகவை பொறுத்தவரை 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருக்கிறோம். எங்களுக்கு சீட் எண்ணிக்கை முக்கியம் அல்ல. மதவாத சக்திகள் வளர்ந்து விடக்கூடாது.
சாதி, மத மோதல்களை உருவாக்கும் உள் நோக்கத்துடன் மதவாத சக்திகள் செயல்படுகிறார்கள்.

இதை முறியடிக்க வேண்டும். மதிமுகவுக்கு உரிய அங்கீகாரத்தை கூட்டணி தலைமையான திமுக வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மதிமுக எத்தனை சீட்டில் போட்டியிட வேண்டும் என்பதை கட்சி தலைமை முடிவு செய்யும். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதி குறைக்கப்படும் என ஆரூடம் கூறுகிறார்கள். கற்பனையான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. கூடுதல் தொகுதி கிடைத்தால் சந்தோஷம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்பது சாத்தியமல்ல. மற்ற கட்சிகளுக்கு எப்படியோ, எங்களுக்கு தெரியாது. ஆனால், கூட்டணி ஆட்சி தமிழ்நாட்டுக்கு உகந்தது அல்ல என்பது மதிமுகவின் கருத்தாகும். எந்த வகையிலும் மத வாத சக்திகள் வளர இடமளிக்க கூடாது.

தமிழ்நாட்டில் மதவாத சக்திகளை முறியடிக்க, ஜனநாயக சக்திகள் இணைய வேண்டும். விஜய் மிகப்பெரிய நடிகர். அவருக்கு இளைஞர்கள் செல்வாக்கு உள்ளது என்பது மறுப்பதிற்கில்லை. அவரும் மதவாத சக்திகளை எதிர்க்கிறார்.
ஆனால் அவரை அறியாமலேயே மதவாத சக்திகளுக்கு உதவி விட கூடாது என்பது தான் எங்கள் கருத்தாகும். குறுக்கு வழியில் வெற்றி பெற மதவாத சக்திகள் எஸ்.ஐ.ஆரை பயன்படுத்த நினைக்கிறார்கள். தகுதியான அனைவரும் வாக்காளர் பட்டியலில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Tamil Nadu ,Durai Wiko ,M. B. ,Nagarko ,Durai Waiko ,Nagarkoville ,Thurai ,Wiko ,Dimuka alliance ,
× RELATED சொல்லிட்டாங்க…