திருமலை: கள்ளக்காதலை கண்டித்த கணவனை கள்ளக்காதலனுடன் ேசர்ந்து கொலை செய்துவிட்டு பள்ளிக்கு சென்ற ஆசிரியை, அங்கிருந்தபடி தனது வீட்டு உரிமையாளரிடம் கணவருக்கு உடல்நிலை சரியில்லை என்ன ஆனார் என பாருங்கள் என நாடகமாடினார். அவரையும், காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட் நகரில் உள்ள மாருதி காலனியை சேர்ந்தவர் லக்ஷ்மன்நாயக்(38). இவரது மனைவி பத்மா(30). இவர் பட்டுகாடிப்பள்ளிதாண்டா தொடக்கப்பள்ளி ஆசிரியை. தடூர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் கோபி (40). திருமணமானவர். இவர்கள் இருவரிடையே ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையறிந்த லக்ஷ்மன்நாயக், மனைவி பத்மாவை கண்டித்துள்ளார். இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனை கொல்ல பத்மா திட்டமிட்டுள்ளார். இதை தனது கள்ளக்காதலன் கோபியிடம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 24ம்தேதி லக்ஷ்மன் நாயக் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது கோபியை வரவழைத்து பத்மா, லக்ஷ்மன்நாயக்கின் முகத்தை துணியால் அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் கோபி அங்கிருந்து சென்றுவிட்டார். மறுநாள் காலையில், பத்மா எதுவும் நடக்காததுபோல் பள்ளிக்கு சென்றுவிட்டார். பள்ளியில் இருந்தபடி தனது வீட்டு உரிமையாளருக்கு போன் செய்து, எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை.
பலமுறை போன் செய்தும் அவர் எடுக்கவில்லை. அவர் என்ன ஆனார் என தெரியவில்லை என்று கதறியுள்ளார். அதற்கு வீட்டு உரிமையாளர் தான் பார்த்துவிட்டு தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் அவர் வீட்டுக்கு செல்வதற்குள் பத்மா விரைந்து வந்து தனது கணவர் இறந்துவிட்டதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது அங்கிருந்தவர்களை நம்ப வைத்துள்ளார். இதையறிந்து அங்கு வந்த லக்ஷ்மன் நாயக்கின் தம்பிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில்
போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் நேற்று பத்மாவிடம் விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த லஷ்மன்நாயக்கை கள்ளக்காதலன் கோபியுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததை பத்மா ஒப்புக்கொண்டார். அதன்பேரில் பத்மா, கோபி இருவரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்காக கணவனை பள்ளி ஆசிரியை தனது காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
