×

உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா சரமாரி தாக்குதல்; அமைதி பேச்சுவார்த்தையை முடக்க சதியா?.. நாளை டிரம்பை ஜெலன்ஸ்கி சந்திக்கும் நிலையில் பதற்றம்

 

கீவ்,: அமெரிக்காவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இன்று அதிகாலை சரமாரி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த 4 ஆண்டுகளாகப் போர் நீடித்து வரும் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் நாளை (28ம் தேதி) புளோரிடாவில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர். இந்தச் சந்திப்பின்போது 20 அம்ச அமைதி ஒப்பந்தம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்நிலையில், இன்று (27ம் தேதி) அதிகாலை உக்ரைன் தலைநகர் கீவ் மீது ரஷ்யா இதுவரை இல்லாத அளவிற்குப் பிரம்மாண்ட தாக்குதலை நடத்தியது. கின்சல், இஸ்கந்தர், கலிபர் போன்ற அதிநவீன ஏவுகணைகள் மற்றும் சுமார் 600 டிரோன்களைப் பயன்படுத்தி ரஷ்யப் படைகள் சரமாரியாகக் குண்டுமழை பொழிந்தன.

இதனால் நகரின் மையப்பகுதிகளில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்துக்கள் ஏற்பட்டதுடன், ப்ரோவரி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் முழுமையாகத் துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து கீவ் நகர மேயர் விட்டலி கிளிட்ச்கோ, ‘வான்வழித் தாக்குதல் அபாயம் நீடிப்பதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பதுங்கு குழிகளில் இருக்குமாறு’ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தச் சூழலில், அமெரிக்கா முன்னெடுக்கும் அமைதி முயற்சியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே ரஷ்யா இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னதாக ஜெலன்ஸ்கி கூறுகையில், ‘அமைதி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டது; எஞ்சிய விவகாரங்கள் விரைவில் தீர்க்கப்படும்’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முழுமையான பாதுகாப்பு உத்தரவாதம், ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான உறுதியான தேதி, தற்போதைய போர் முனையைத் தற்காலிக எல்லையாகக் கொள்வது மற்றும் மறுசீரமைப்பிற்கு 800 பில்லியன் டாலர் நிதியுதவி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. டான்பாஸ் பகுதிகள் மற்றும் அணுமின் நிலையப் பகுதிகளில் ராணுவமற்ற மண்டலங்களை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு நிலப்பரப்பையும் விட்டுக்கொடுக்க மக்கள் வாக்கெடுப்பு தேவை என உக்ரைன் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், ‘நான் ஒப்புதல் அளிக்கும் வரை ஒப்பந்தம் உறுதியல்ல’ என்று டிரம்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Russia ,Zelensky ,Trump ,Kiev ,United States ,Ukraine ,
× RELATED தைவானின் வடகிழக்கு கடலோர நகரமான...