சென்னை: போலியான ஆன்லைன் முதலீட்டு வர்த்தக வாட்சப் குழு மூலம் ரூபாய் 3.4 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பெண்கள் உட்பட3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அடையாறில் வசித்து வரும் வாதி திரு.சத்தியநாதன், வ/68, என்பவர் கடந்த 2025ம் ஆண்டு ஜீலை மாதம் பெங்களூரில் உள்ள Fyers Securities அதிகாரிகளாக கூறி தன்னை FYERS VIP என்ற வாட்ஸ் ஆப் குழுவில் இணைத்ததாகவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான தொழில்முறை விவாதங்கள் மூலம் நம்பிக்கை ஏற்படுத்தி FYERSHNI என்ற மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்யும்படி அறிவுறுத்தியதால் வாதியும் செயலியை பதிவிறக்கம் செய்து,
மோசடியாளர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் வாதியானவர் கடந்த 07.07.2025 முதல் 25.07.2025ம் தேதி வரை அவரது Axis Bank வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3 கோடியே 40 லட்சத்தை மோசடியாளர்கள் கொடுத்த 13 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்துள்ளார் என்றும் அதன்பின் வாதி தனது பணத்தை திரும்ப கேட்ட பின் மொபைல் செயலி முழுவதுமாக முடக்கப்பட்டு பயன்படுத்த இயலாமல் மறைந்துவிட்டதாகவும், அதன் பின்பு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து National Cyber Crime Reporting Portalல் புகார் அளித்து ஒப்புகை சீட்டு பெற்றதாகவும் வாதி சத்தியநாதன் என்பவர் சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் கொடுத்த புகாரின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் கடந்த 07.10.2025ம் தேதி வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் மீது துரித விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, கூடுதல் ஆணையாளர் வழிகாட்டுதலின்பேரில், சைபர் கிரைம் பிரிவு உதவி ஆணையாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, இவ்வழக்கில் தொடர்புடைய எதிரி 1.பாலசுப்ரமணியன், வ/51, ஜெகநாத் நகர் 1வது தெரு, தஞ்சாவூர் என்பவரை 22.11.2025 அன்று கைது செய்தனர். மேலும், காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவு எதிரிகள் 2.முருகேஷ், வ/49, மேலூர், தூத்துக்குடி மாவட்டம், 3.எப்சி, பெ/வ.35, சங்கரபேரி, தூத்துக்குடி மாவட்டம், 4.பஞ்சவர்ணம், பெ/வ.33, திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் ஆகியோரை நேற்று (24.12.2025) கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் இவ்வழக்கின் முக்கிய எதிரியின் தரகர்கள் மூலம் எதிரிகள் எப்சி மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோரை அணுகி, தங்களுக்கு சில வங்கி கணக்குகள் தேவைப்படுவதாகவும், அக்கணக்கிற்கு வரும் பணத்தை எடுத்துக் கொடுத்தால் கணிசமான தொகை தருவதாகவும் கூறியதன்பேரில், மகளிர் சுய உதவிக்குழுக்களில் உள்ள எதிரிகள் எப்சி மற்றும் பஞ்சவர்ணம் ஆகியோர் மற்றொரு எதிரி முருகேஷ் என்பவரின் வங்கி கணக்கு உட்பட சிலரது வங்கி கணக்குகளை தரகருக்கு கொடுத்ததும், இதில் புகார்தாரர் செலுத்திய ரூ.6,00,790/- பணம் எதிரி முருகேஷின் வங்கி கணக்கிற்கு அனுப்பி, அந்த பணத்தை முருகேஷ் காசோலை மூலம் எடுத்து தரகருக்கு கொடுத்து, தரகர் அதற்கான கமிஷன் தொகையை முருகேஷிற்கு கொடுத்ததும் தெரியவந்தது. இதுபோல 5 வங்கி கணக்குகள் பெற்று கொடுத்து அதில் சுமாராக ரூ.45,00,000/- பணப்பரிமாற்றம் செய்யப்பட்டு அதனை வங்கி கணக்கு உபயோகிப்பாளர் மூலமாகவே வங்கியில் இருந்து காசோலை மூலமாக பணத்தை எடுத்து கொடுத்த பின் அவர்களுக்கான கமிஷன் தொகையை கொடுத்துள்ளது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட 3 எதிரிகளும் விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். ஆகவே, பொதுமக்கள் அதிக லாபம் உத்தரவாதம் என கூறும் ஆன்லைன் வர்த்தக முதலீடுகள், போலியான வர்த்தக செயலிகள் மற்றும் தெரியாத வாட்ஸ்அப் குழுக்களை நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், பொதுமக்களின் ஏழ்மையையும் பொருளாதார பற்றாக்குறையையும் பயன்படுத்தி சில தரகர்கள் வங்கி கணக்குகளை தருமாறும், அதில் வரும் பணத்தை எடுத்துக் கொடுத்தால் நல்ல கமிஷன் தொகை தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினால் யாரும் தங்களது வங்கி கணக்கு விவரங்களை மோசடி நபர்களுக்கு தர வேண்டாம் என்றும், அவ்வாறு பணத்திற்கு ஆசைப்பட்டு வங்கி கணக்கை பிறருக்கு கொடுத்தாலும், அல்லது அதில் வரும் பணத்தை எடுத்து கொடுத்தாலும் குற்றச் செயல் ஆகும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இணையவழி மோசடிகள் மற்றும் குற்றங்களில் பாதிக்கப்பட்டால், உடனடியாக www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் கிரைம் இணையதளத்திலும், தேசிய சைபர் கிரைம் உதவி எண் 1930 என்ற எண்ணை அழைக்கவும், மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையங்களை அணுகுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
