×

குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; போதையில் காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது: ஆதரவின்றி அனாதையாக நிற்கும் 2 குழந்தைகள்

 

சென்னை: குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்ட மனைவியை போதையில் கணவனே அடித்து கொலை செய்தார். அந்த சம்பவத்தால் அசோக்நகரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அசோக்நகர் புதூர் 13வது தெருவை சேர்ந்தவர் பிரவீன்குமார்(31). இவர் கடந்த 2015ம் ஆண்டு வித்யபாரதி(28) என்பவரை காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். இவர்களுக்கு 8 வயதில் மகன் மற்றும் 4 வயதில் மகள் உள்ளனர். இருவரும் புதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் படித்து வருகின்றனர். பிரவீன்குமார் ஜெனரேட்டர் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் என்பதால் இவர்களுக்கு இரு வீட்டாரும் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் சற்று வறுமையில் பிரவீன்குமார் தனது காதல் மனைவி வித்யபாரதியுடன் குடும்பம் நடத்தி வந்தார். போதிய வருமானம் இல்லாததால் மனமுடைந்த பிரவீன்குமார் மது போதைக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி கணவன் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வழக்கம் போல் நேற்று பணி முடிந்து வீட்டிற்கு மதுபோதையில் பிரவீன்குமார் வந்துள்ளார். இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். போதையில் இருந்ததால் பிரவீன்குமார் தனது காதல் மனைவியை 2 குழந்தைகள் முன்பு கடுமையாக தாக்கி கீழே தள்ளியுள்ளார். இதில் வித்யபாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிவிட்டார். இதை பார்த்த பிரவீன்குமார் அச்சத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தனது தாய் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்தது அவரது 2 குழந்தைகளும் அழுதுள்ளனர். சத்தம் கேட்டு அருகில் வசிப்போர் ஓடிவந்து வித்யபாரதியை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சோதனை செய்த டாக்டர்கள் வித்யபாரதி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். அதை கேட்டு 2 குழந்தைகளும் அலறி துடித்ததை மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் படி அசோக் நகர் போலீசார் வித்யபாரதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு ெசய்த போலீசார், வீட்டின் அருகே போதையில் இருந்த பிரவீன்குமாரை கைது செய்தனர். தாய் இறந்துவிட்டார், தந்தையை போலீசார் கைது செய்துவிட்டனர். இதனால் 2 குழந்தைகள் தற்போது எந்த ஆதரவுமின்றி அநாதையாக நிற்கும் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Ashoknagar ,Pravinkumar ,13th Street ,Ashoknagar Budur, Chennai ,
× RELATED வாட்சப் குழு மூலம் ரூபாய் 3.4 கோடி மோசடி: 3 பேர் கைது; செல்போன் பறிமுதல்