×

கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதன் காரணமாக பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

 

சென்னை: கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதன் காரணமாக பாமகவில் இருந்து ஜி.கே.மணியை அதிரடியாக நீக்கி அன்புமணி தரப்பு அறிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையிலான மோதல் உச்சத்தில் இருந்து வருகிறது. பாமகவின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அந்த பதவியை தாமே எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். மேலும், பாமக செயல் தலைவராக தனது மகள் காந்திமதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராமதாஸ். மேலும், அன்புமணி மற்றும் செளமியா அன்புமணி மீது ராமதாஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார்.

அதேபோல், கட்சிக்கு தலைவர் நான் தான் என அறிவித்துக்கொண்ட அன்புமணி தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் தனியாக அலுவலகம் அமைத்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றார். இதையடுத்து, இரண்டு பிரிவுகளாக உள்ள பாமகவின் சின்னமான மாம்பழம் யாருக்கு என்பதில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டு அது நீதிமன்றம் சென்றுள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவர்களுக்கு இடையில் இணைப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என்ற நிலை நீடிக்கிறது. இதற்கிடையே ராமதாஸ் ஆதரவாளரான மூத்த நிர்வாகியும் பாமக கவுரவ தலைவருமான ஜி.கே.மணி, அன்புமணிக்கு எதிராக தொடர்ந்துபேசி வந்தார்.

மேலும், நீதிமன்ற வழக்கு, காவல்துறை புகார், தேர்தல் ஆணையத்தில் முறையீடு என தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக அன்புமணி தரப்பு கட்சி விரோத நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்தநிலையில் அவர் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி தரப்பில் அறிக்கை வெளியாகி உள்ளது. இதுகுறித்து (அன்புமணி தரப்பு ) பாமக தலைமை நிலைய அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நலனுக்கும், கட்சித் தலைமைக்கும் எதிராக செயல்பட்டு வருவதால், அதற்காக கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரில் இருந்து அவரை ஏன் நீக்கக்கூடாது? என்பது குறித்து ஒரு வாரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி அவருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கடந்த 18ம் தேதி அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

அவருக்கு அளிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்த நிலையில், ஜி.கே.மணியிடமிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. அதைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு சென்னையில் கூடி இது குறித்து விவாதித்தது. கட்சி விரோத செயல்பாடுகள் குறித்து ஜி.கே.மணி எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், கட்சியின் அமைப்பு விதி 30-ன்படி அடிப்படை உறுப்பினரிலிருந்து அவரை நீக்கலாம் என்று கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரைத்தது. அதை ஏற்று ஜி.கே.மணி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஜி.கே.மணியுடன் பாட்டாளி மக்கள் கட்சியினர் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காமெடி… நெட்டிசன்கள் கிண்டல்
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே மோதல் போக்கு வெடித்த நிலையில் அக்கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்தார். தொடர்ந்து அவரது ஆதரவாளர்களான வடிவேல் ராவணன், திலகபாமா, பாலு போன்றோரை அடுத்தடுத்து நீக்கினார். இதற்கு பதிலாக அன்புமணி, ராமதாஸ் ஆதரவாளர்களான சேலம் அருள், மற்றும் ஒரு சில மாநில, மாவட்ட நிர்வாகிகளை நீக்கி இருந்த நிலையில் தற்போது மூத்த தலைவர்களுள் ஒருவரான ஜி.கே.மணியையும் நீக்கி உள்ளார். இதனை விமர்ச்சிக்கும் வகையில் அன்புமணி காமெடிக்கு ஒரு அளவே இல்லை என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்துள்ளனர்.

Tags : G. ,Pamaka ,K. ,Chennai ,Palamaha ,Anbumani ,Ramadas ,Batali People's Party ,
× RELATED அதிமுக பெண் நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை