*தப்பி செல்லும் போது தவறி விழுந்ததில் கை, கால் முறிந்தது
கோவை : கோவையில் முகவரி கேட்பது போல நடித்து நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். முன்னதாக போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற போது தவறி விழுந்து கை, கால் முறிந்தது.கோவை துடியலூர் மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (53).
சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு துடியலூர் சந்தை அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் பிரகாசின் அருகில் சென்று முகவரி கேட்பது போல நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது திடீரென்று அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர்கள் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து பிரகாஷ் துடியலூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி ஆசாமிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வெள்ளகிணறு பகுதியில் வழிப்பறி ஆசாமிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் போலீசார் வருவதை பார்த்து பைக்கில் தப்பி செல்ல முயற்சி செய்தனர். அப்போது நிலைதடுமாறி பைக்கில் இருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில் ஒருவருக்கு கை மற்றும் மற்றொருவருக்கு காலும் முறிந்தது.
இருவரையும் மீட்டு போலீசார் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் தேனி கோடங்கிபட்டியை சேர்ந்த சிவா (22) மற்றும் பெரம்பலூர் மங்களமேடு பகுதியை சேர்ந்த கிஷோர் என்கிற பார்த்தசாரதி (24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.
